பக்கங்கள்

06 செப்டம்பர் 2013

ஜெனிவாவில் தீக்குளித்து இறந்தவர் புங்குடுதீவை சேர்ந்தவர்!

சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஜ.நா வளாகத்தில் நேற்று தீக்குளித்து இறந்தவர் ஈழத்தமிழர் என தெரியவந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் வலைஸ் மாநில தலைநகரான சியோன் பகுதியில் வசித்து வந்த 34வயதுடைய இரத்தினசிங்கம் செந்தில்குமாரன் என தெரியவந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற ஜெனிவா ஐ.நா. முன்றலில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் நேற்று இரவு அவருக்கு மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இவர் தாயகத்தில் புங்குடுதீவை சேர்ந்தவர் என்றும் மூன்று பிள்ளைகளின் தந்தை என்றும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் ஒரு தமிழீழ செயற்பாட்டாளர் என்றும் தெரியவருகிறது. நேற்று அதிகாலை ஐ.நா. முன்றலில் தீக்குளித்த இவர் காவல்துறையினரால் மீட்கப்பட்டு லவுசான் மாநிலத்தில் உள்ள சூவ் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை 4.30மணியளவில் மரணமானார். இச்சம்பவம் தொடர்பாக நேற்றுகாலை லவுசான் மாநகர சபை உறுப்பினரும் சுவிஸ் தமிழர் பேரவை செயலாளருமான த.நமசிவாயத்திடம் தொடர்பு கொண்டு சம்பவம் பற்றி காவல்துறையினர் தெரிவித்ததுடன் இவர் தீக்குளித்த இடத்திற்கு அருகில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உடை அணிந்த ஒருவரின் புகைப்படம் காணப்பட்டதாகவும் எனவே இவர் தமிழராக இருக்கலாம் என தாம் கருதுவதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தீக்குளித்தவர் ஈழத்தமிழர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவரது சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை கேள்வியுற்ற சுவிஸ் நாட்டில் உள்ள தமிழ் மக்கள் ஐ.நா. முன்றலுக்கு சென்று மலர் கொத்து வைத்து மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எதிர்வரும் 9ஆம் திகதி திங்கட்கிழமை ஜெனிவாவில் ஐ.நா.மனித உரிமை பேரவையின் 24ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில் இச்சம்பவம் நடைபெற்றிருக்கிறது. கடந்த 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் கல்வி கற்றுக்கொண்டிருந்த முருகதாஸ் என்ற தமிழ் இளைஞர் ஜெனிவா ஐ.நா.முன்றலில் தீக்குளித்து இறந்தார் என்றும், சிறிலங்காவில் தமிழர்கள் படும் துன்பங்களை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்துவதற்காக அவர் இதனை செய்ததாகவும் ஜெனிவா பத்திரிகைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.