பக்கங்கள்

03 மே 2013

''என் வாப்பா பயங்கரவாதியல்ல'' - ஆஸாத் சாலியின் மகள்

முஸ்லிம் சமூகத்தின்
விமோசனத்திற்காக என்னுடைய வாப்பா பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாலும் அவர் ஒரு பயங்கரவாதி அல்ல என, ஆஸாத் சாலியின் மகள் ஆமினா ஆஸாத் சாலி தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த,சிங்கள இனவாதிகள் மேற்கொண்ட செயற்பாடுகளை என்னுடைய வாப்பா எதிர்த்தார். முஸ்லிம்களின் நலனுக்காக பொது பல சேனா உள்ளிட்ட பல இனவாத அமைப்புக்களுடன் அவர் நேரடி வாக்குவாதங்களில் ஈடுபட்டார். பொது பல சேனா முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவதை சுட்டிக்காட்டி என்னுடைய வாப்பா ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார். அவர் முஸ்லிம்கள் குறித்து சிந்தித்தார். அவர் முஸ்லிம்கள் குறித்து துணிவாக பேசினார். அவர் ஒருபோதும் இனவாதம் பேசவில்லை. அவரது நோக்கமெல்லாம் முஸ்லிம்களை இனவாத சூழ்ச்சிகளிலிருந்து காப்பாற்றுவதாகவே இருந்தது. முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்த வேண்டுமென அவர் ஒருபோதும் வலியுறுத்தவில்லை. முஸ்லிம்கள் மீது அடக்குமுறைகள் தொடருமாயின் முஸ்லிம்கள் ஆயுதம் ஏற்றும் சூழ்நிலை தோன்றுமென்றே எச்சரித்தார். இப்படி எச்சரிப்பது பயங்கரவாதமாக மாறிவிடுமா..? இன்று என்னுடைய வாப்பா அநீதியான முறையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதே அவருடைய மகளான எனது ஒரே எதிர்பார்ப்பு. இன்று வெள்ளிக்கிழமை, 3 ஆம் திகதி இதுகுறித்த பிரார்த்தனை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாப்பா உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தி இன்று ஜும்ஆவிற்கு பின்னர் பல சமூகத்தவர்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்துள்ளதாக அறிகிறேன். எனது வாப்பா எந்த சமூகத்திற்காக குரல் கொடுத்தாரோ அந்த சமூகமான முஸ்லிம்கள் இதில் முன்நிற்பார்கள் என்று நான் நம்புகிறேன். முஸ்லிம் சமூகம் எனது வாப்பாவின் விடுதலையை துரிதப்படுத்துமென எதிர்பார்க்கிறேன். நான் எனது வாப்பாவின் நலத்திற்காகவும், விடுதலைக்காகவும் துஆ செய்கிறேன். அதுபோன்று இலங்கை முஸ்லிம்களும், வெளிநாடுகளிலுள்ள இலங்கை முஸ்லிம்களும் எனது வாப்பாவிற்காக அந்த இறைவனிடம் துஆ கேட்பதுடன், அவரை விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளிலும் முழு அளவில் பங்கேற்பார்கள் என நம்புகிறேன் எனவும் ஆஸாத் சாலியின் மகளான ஆமினா ஆஸாத் சாலி,கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.