பக்கங்கள்

28 மே 2013

இலுப்பக்கடவை சாட்டி யாருக்குச் சொந்தம்?

இலுப்பக்கடவை சாட்டி யாருக்குச் சொந்தம்? கடற்படைக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல்இலுப்பக்கடவை கடற்கரையிலுள்ள சாட்டி யாருக்கு என்பது தொடர்பில் அப்பகுதியில் முகாமிட்டிருக்கும் கடற்படையினருக்கும் மக்களுக்கும் இடையில் கடும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இலுப்பக்கடவை சாட்டிப் பகுதி கடற்தொழிலுக்குச் செல்லும் மக்கள் தமது படகுகளை கரை சேர்க்கும் இடமாகும். அப்பகுதியை தற்பொழுது இராணுவத்தினர் தமது பாவனைக்காக எடுத்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் உள்ள இலுப்பைக்கடவை 2008ஆம் ஆண்டில் இலங்கை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது. இலுப்பக்கடவையை கைப்பற்ற இலங்கை இராணுவத்தினர் கடும் யுத்தம் செய்தனர். விடுதலைப் புலிகளும் கடுமையாக திருப்பித் தாக்கினர். எனினும் இலுப்பக்கடவையை விட்டு புலிகள் பின் வாங்கியதையடுத்தே அப்பகுதியை இராணுவம் கைப்பற்றியது. சாட்டியை அபகரித்தமை தொடர்பில் மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததுடன் தாம் காலம் காலமாக தொழில் செய்த இடம் தமக்குச் சொந்தமானது என்றும் அதனை திருப்பித் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனை மறுத்த கடற்படையினர் அப்பகுதியை மக்களிடம் மீளக்கையளிக்கப் போவதில்லை என்று பிடிவாதமாகத் தெரிவித்தனர். இந்த முறுகல் நிலையைத் தொடர்ந்து நிலத்தகராறை தீர்க்க கடற்படையினருக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. தாம் காலம் காலமாக தொழில் செய்த இடம் மக்களுக்குச் சொந்தமானது அதனை கடற்படை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீங்கள் காலம் காலமாக தொழில் செய்த உங்கள் இடமாக இருக்கலாம் என்று தெரிவித்த கடற்படையினர் நாங்கள் யுத்தம்மூலம் மீட்ட இடங்கள் எங்களுக்கே சொந்தமானது என்று தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த மக்கள் பயங்கரவாதிகளிடமிருந்து நிலத்தையும் தமிழ்மக்களையும் மீட்கிறோம் என்று சொல்லி யுத்தம் நடத்தியது இதற்காகவா? என்று கூட்டத்தில் கேள்வி எழுப்பினர். கடற்படையினர் மக்களுக்கு சாட்டியை கையளிக்க தயாரில்லை என்பதைத் தொடர்ந்து சாட்டியை மீட்பதற்குரிய போராட்டங்களை முன்னெடுப்பதாகக்கூறி மக்கள் முறுகல் நிலையுடன் கலைந்து சென்றனர்.

நன்றி:குளோபல் தமிழ் செய்தி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.