பக்கங்கள்

20 மே 2013

சட்டத்தரணிகளை மிரட்டுகிறது படைத்தரப்பு!

படையினரிடம் சரணடைந்த பின் காணாமற் போனவர்கள் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை திரும்பப் பெறுமாறு மனுதாரர்கள் இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர் என்று காணாமற் போனோரை தேடிக் கண்டறியும் குழுவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். போரின் இறுதிக் கட்டத்தில் அரச படையினரின் அறிவித்தலுக்கு அமைய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான முன்னாள் போராளிகள் 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தனர். இதன் பின்னர் சரணடைந்தவர்கள் அவர்களது உறவினர்களின் கண்ணெதிரே படையினரால் பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர். எனினும் அதன் பின்னர் அவர்களது நிலை என்னவென்று தெரியா நிலையில் அவர்களது உறவினர்கள் உள்ளனர். இந்த நிலையில் சரணடைந்து காணாமல் போனவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளவர்களில் ஐந்து பேர் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் ஆட்கொணர்வு மனுக்களை கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதனையடுத்து, முல்லைத்தீவில் உள்ள 58 ஆம் படைப்பிரிவின் தலைமை அதிகாரியையும், இராணுவ தளபதியையும் இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையாகி இது தொடர்பில் சாட்சியமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கைத் திரும்பப் பெறுமாறு அதனைத் தாக்கல் செய்தவர்களுக்கு, தொலைபேசியூடாகவும், நேரிலும் சீருடையினர் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர். இதன் காரணமாக அவர்கள் வழக்கை தொடர்ந்து நடத்துவது குறித்து அச்சம் அடைந்துள்ளனர். ஆயினும் குறித்த வழக்கில், வழக்கை தாக்கல் செய்தவர்களை தமது அமைப்பினர் பாதுகாப்பாக அழைத்து வந்து நீதிமன்றில் இன்று முற்படுத்துவர் என்று காணாமல் போனோரை தேடிக் கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.