பக்கங்கள்

01 மே 2013

கொமன்வெல்த்துக்கான நிதியுதவியை நிறுத்துமா கனடா?

இந்த ஆண்டில் தலைவர்களின் உச்சி மாநாட்டை சிறிலங்காவில் நடத்த அனுமதித்ததன் மூலம் மிகப்பெரிய சோதனை ஒன்றில் கொமன்வெல்த் தோல்வியடைந்துள்ளது என்று கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் தெரிவித்துள்ளார். எனினும் கொமன்வெல்த் அமைப்பில் இருந்து விலகும் எண்ணம் கனடாவுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கனேடிய நாடாளுமன்றத்தின் பொதுச்சபை வெளிவிவகாரக் குழுவின் முன்பாக நேற்று உரையாற்றிய அவர், “சிறிலங்காவின் நிலைமைகள் மோசமடைந்து வருவது குறித்தும், சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரப்போக்கு தொடர்பாகவும், நாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார். பின்னர் செய்தியார்களிடம் பேசிய ஜோன் பயார்ட், “கனடா மட்டும் தான், ஒட்டுமொத்த கொமன்வெல்த் அமைப்பிலும் உள்ள மோசமான நிலைமையை வெளிப்படுத்தி வருகின்ற ஒரே நாடாக உள்ளது.இது ஒரு சோதனை என்று நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். அதேவேளை சிறிலங்காவில் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கும் முடிவுக்கு அப்பால் கனடா எடுக்கக் கூடிய ஏனைய நடவடிக்கைகள் என்னவென்று ஜோன் பயார்ட் கூறவில்லை. கனேடிய அரசாங்கம் கொமன்வெல்த் அமைப்பில் இருந்து விலகும் எண்ணம் உள்ளதா என்று கேள்விக்கு அவர், “இப்போது இல்லை” என்று பதிலளித்துள்ளார். அதேவேளை, கனேடிய அரசாங்கமும், கனேடிய இராஜதந்திரிகளும், இந்த விவகாரத்தில் ஏனைய கொமன்வெல்த் நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனாலும், அந்த முயற்சிகள் வெற்றி பெறாததற்கான காரணம் குறித்து கருத்து வெளியிடப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதேவேளை, கொமன்வெல்த்தில் இருந்து விலகுவது உள்ளிட்ட எல்லா வாய்ப்புகள் குறித்தும் கனேடிய அரசாங்கம் ஆலோசிக்க வேண்டும் என்று கனடாவின் தேசிய ஜனநாயக் கட்சியின் வெளிவிவகாரக் குழு உறுப்பினர் போல் டேவர் தெரிவித்துள்ளார். கொமன்வெல்த் அமைப்புக்கு நிதி வழங்கும் நாடுகளில் கனடா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் கனடா வழங்கி வரும் 25 மில்லியன் டொலர் நிதியை கனடா நிறுத்தி வைத்தால், கொமன்வெல்த் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.