பக்கங்கள்

04 மே 2013

தமிழரின் காணிகளில் சிங்களவர் குடியேற்றம்!

செட்டிகுளம் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வீரபுரம் கிராம வீட்டுத் திட்டக் காணிகளில் உலுக்குளத்தில் வசிக்கும் சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்
வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்தக் காணிகள் 1995 ஆம் ஆண்டு 400 தமிழ் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத் தேவைக்கென தலா ஒரு ஏக்கர் வீதம் காணி அனுமதிப்பத்திரத்துடன் பிரதேச செயலாளரால் வழங்கப்பட்டவையாகும். இந்தக்காணிகளிலேயே உலுக்குளத்தில் வசிக்கும் சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மிகத் துரிதமாக அரசால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் பின்னணியில் காணி அமைச்சு செயற்படுவதோடு இன நல்லிணக்கம் தொடர்பாக மாவட்டங்கள் தோறும் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவவிஜயசிங்கவும் முழுமூச்சாக உள்ளார். காணி அனுமதிப்பத்திரங்களுடைய தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து சிங்கள மக்களைகுடியேற்றும் அரசின் இத்தகைய அடாவடித்தனங்களை உடன் நிறுத்த முன்வருமாறு சர்வதேச சமூகம் உட்பட அனைத்துத் தரப்பினரிடமும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 29 ஆம் திகதி செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவவிஜயசிங்க தலைமையில் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் மத்தியில் இன நல்லிணக்கம் தொடர்பாகவும் அவர்களின் தேவைகள் பற்றியும் அறியும்பொருட்டு கூட்டமொன்று நடத்தப்பட்டது. செட்டிகுளம் பிரதேச செயலர் உட்பட அதிகாரிகள் மற்றும் கூடியிருந்தவர்கள் முன்னிலையில் மேற்படி 400 ஏக்கர் காணி கவனிப்பாரற்றுக் கிடப்பதாகவும் அவற்றை உலுக்குளம் சிங்கள மக்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் சமூகமளித்திருந்த காணிச் சொந்தக்காரர்களான தமிழ் மக்கள் தமது காணிகளைச் சிங்கள மக்கள் அபகரித்து வருவதாக முறையிட்ட போதே அரச நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்தக் காணி அப்போதைய வட கிழக்கு மாகாண அரசினால் காணி அமைச்சின் அனுமதியுடன் செட்டிக்குளம் பிரதேச செயலரால் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. எது எவ்வாறு இருப்பினும் அரசினால் காணி அனுமதிப்பத்திரத்துடன் வழங்கப்பட்ட காணிகளை மீளப்பறிக்கும் ஏற்பாடுகள் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியவையே. அதிலும் ஓர் இனத்திடமிருந்து அவர்களது சொந்தக் காணிகளைப் பறித்தெடுத்து அங்கு சிங்கள மக்களைக் குடியேற்றும் நடவடிக்கையானது அடிப்படை மனித உரிமை மீறலாகும். இதனால் எவ்வாறு இன நல்லிணக்கத்தைப் பேணவும் மேம்படுத்தவும் முடியும் என அரசு நினைக்கின்றது. காணி உறுதிகள், அனுமதிப் பத்திரங்கள் முதலானவை தமிழர் பகுதிகளில் தேவையற்றன என்று அரசு கருதினால் வடக்கு கிழக்கிலுள்ள மக்களைத் திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைத்துவிட்டு அரசு தமக்குத் தேவையான காணிகளைச் சுவீகரிப்பது மேலானது எனவும் சிவசக்தி ஆனந்தன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.