பக்கங்கள்

11 மே 2013

த.தே.கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பில் முடிவில்லை!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்வதில் மன்னாரில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் முடிவெதுவும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள ஐந்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் இடையே, மன்னார் ஆயர் தலைமையில் நடைபெற்ற முக்கிய கூட்டம் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய
கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தன், மற்றும் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் விளக்கமளித்தனர். இதேபோன்று, ஈ.பி.ஆர்.எல்.எவ், டெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தமது நிலைப்பாட்டை எடுத்துக் கூறினர். இருப்பினும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பை பதிவு செய்வதில் எந்தவிதமான முடிவுகளும் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை என சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார். இதேவேளை, பதிவு செய்வது தொடர்பிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகள் ஒரு புரிந்துணர்வு அடிப்படையில் செயற்படுவதற்குத் தமிழரசுக் கட்சியினர் சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்வதற்கு முன்வந்துள்ளதாக, அந்தக் கட்சிக்கும் டெலோ அமைப்புக்கும் இடையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின் முடிவுகள் குறித்து தெரிவித்த டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கூறினார். தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் மன்னார் ஆயர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பையடுத்து, வடமாகாணத்தின் பல மாவட்டங்களையும் சேர்ந்த சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில், தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகளை என்ன வகையில் எதிர்காலத்தில் முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றிய நீண்ட கலந்துரையாடலும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.