பக்கங்கள்

18 மே 2013

தமிழர் தாயகத்தில் இன்று துயர் பகிர்வு!

தமிழர் வாழ்வில் துயர்படிந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நான்காம் ஆண்டு நினைவு நாள் தமிழர் தாயகம் மற்றும் அவர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகள் எங்கும் பெருமெடுப் பில் உணர்வெழுச்சியுடன் இன்று நினைவு கூரப்பட வுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் என்பவற்றால் செய்யப்பட்டுள்ளன. 2009 மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் ஆகுதியான உறவுகளை நினைத்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ் மக்களால் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்வுகளுக்கு தடை ஏதும் இல்லை என்று இராணுவம் தெரிவித்துள்ளது. இந்தத் தினத்தில் புலிகளை நினைவுகூரக் கூடாது என்றும் அது அறிவுறுத்தி உள்ளது. போரில் ஆகுதியான எமது உறவுகளுக்காக ஆலயங்களில் இன்றைய தினம் விசேட வழிபாடுகளை நடத்து மாறும், வீடுகளில் மாலை வேளையில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துமாறும் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதான நிகழ்வு: முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் வவுனியாவில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. வவுனியா நகரசபை மண்டபத்தில் காலை 10 மணிக்கு இடம்பெறும் இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்க்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில், மாட்டீன் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு சுடரேற்றும் நிகழ்வும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் இடம்பெறவுள்ளது.கிளிநொச்சி உருத்திரபுரம் புனித பற்றிமா ஆலயத்தில் உள்ள இறுதிப் போரில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்திலும், கிளிநொச்சியில் உள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களிலும் விசேட பூசை வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் இடம்பெறவுள்ளன. அத்துடன் வீடுகளிலும் உயிரிழந்த உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வுகளும் இடம்பெறும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தால் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. தமிழர் தாயகத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் பேரெழுச்சியுடன் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளன. நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மக்களால் பேரெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படவுள்ளன. கண்டனப் பேரணிகள், நினைவுப் பேருரைகள் என்பனவும் இடம்பெறவுள்ளன. பிரான்ஸ் தமிழர் நடுவகத்தால் மாலை 4 மணி முதல் 7 மணிவரை துரோகத்திரோ மெக்ரோ தரிப்பிடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ளன. பிரித்தானிய தமிழர் பேரவையினால் இன்று பி.ப 1 மணிக்கு பேரணி நடத்தப்படவுள்ளது. இந்தப் பேரணியில் மக்களைக் கறுப்பு உடை அணிந்து பங்கெடுக்குமாறு வேண்டுகோள் விடுக்க்பபட்டுள்ளது. றைட் பார்க்கில் ஆரம்பமாகும் பேரணி வெஸ்ற்மினிஸ்ரரில் முடிவடையும். பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் இன்று பி.ப 2மணிக்கு எரேமில் ரெயாரில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. கனடியத் தமிழர் தேசிய அவையினால் மாலை 5 மணிக்கு டென்மார்க் தமிழர் அமைப்புக்களின் ஒன்றியத்தினால் காலை 10 மணிக்கும் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்படவுள்ளன. ஜேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு, ஈழத் தமிழர் மக்கள் அவையினால் பி.ப. 2 மணிக்கு பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. செல்போர்டில் ஆரம்பமாகும் பேரணி லால்ட்ராகில் முடிவடையவுள்ளது. பெல்ஜியம் தமிழ் இளையோர் அமைப்பு, தமிழர் பண்பாட்டுக் கழகம் ஆகியவற்றால் மதியம் 12 மணிக்கும், நெதர்லாந்து தமிழர் பேரவையால் பி.ப 1மணிக்கும், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் நண்பகலும் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்படவுள்ளன. நோர்வேயில் தமிழர் பேரவையால் நோர்வே நாடாளுமன்றத்தின் முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. நாடு கடந்த தமிழீழ அரசினால், அமெரிக்காவில் தமிழீழ சுதந்திர சாசனத்துக்காக முரசறைவு நிகழ்வுகள் இன்று இடம்பெறவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.