பக்கங்கள்

24 மே 2013

திருமலை நகரசபையுடன் அமெரிக்கா உடன்பாடு!

சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதியைப் பெறாமல், திருகோணமலையில் அமெரிக்கன் நிலையத்தை அமைப்பதற்கு திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்கத் தூதரகம் புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொண்ட விவகாரம், சிறிலங்கா அரசுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. திருகோணமலை நகரசபையுடன் இணைந்து பொது தகவல் மற்றும் செயற்பாட்டு நிலையத்தை அமைப்பதற்கு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் புரிந்துணர்வு உடன்பாட்டை செய்து கொண்டுள்ளது. இந்த உடன்பாட்டில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக கலாசார, கல்வி, ஊடக விவகாரங்களுக்கான பணிப்பாளர் கிறிஸ்ரொபர் டீலும், திருகோணமலை நகரசபை முதல்வர் கே. செல்வராசாவும் கையெழுத்திட்டனர். கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக பொதுசன விவகார பிரிவுக்கும் திருகோணமலை நகரசபைக்கும் இடையிலான இந்த உடன்பாடு நேற்றுமுன்தினம் திருகோணமலை பொது நூலகத்தில் வைத்து கையெழுத்திடப்பட்டுள்ளது. இது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்கப்படவோ அல்லது, அதன் அனுமதி பெறப்படவோ இல்லை. அனைத்துலக நடைமுறைகளுக்கு அமைய, கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் உள்ளூர் அதிகாரிகளுடன் ஏதாவது இணக்கப்பாட்டை ஏற்படுத்த முன்னர், அது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்தவோ அல்லது அதன் அனுமதியைப் பெறவோ வேண்டும் என்று சிறிலங்கா அதிகாரிகள் கூறியுள்ளனர்.எனினும் எந்த அனுமதியும் பெறப்படாமல் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் திருகோணமலை நகரசபையுடன் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு உடன்பாடு சிறிலங்கா அரசுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.திருகோணமலை நகரசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத்தின் கீழ் இருந்து வருகின்றது.அமெரிக்கன் கோணர் எனப்படும் பொது தகவல் மற்றும் செயற்பாட்டு நிலையங்களை அமெரிக்கா ஏற்கனவே யாழ்ப்பாணத்தலும் கண்டியிலும் நிறுவியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.