பக்கங்கள்

16 மே 2013

விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் – சிறிலங்காவுக்கு எச்சரிக்கை

மனிதஉரிமை மீறல்களை உரிய முறையில் கையாளத் தவறினால், அதன் விளைவுகளை கொழும்பில் கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாடு நடக்கும் போது, சிறிலங்கா எதிர்கொள்ள வேண்டி வரும் என்று பிரித்தானிய பிரதிப் பிரதமர் நிக் கிளெக் எச்சரித்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று பிரதமருக்கான கேள்வி நேரத்தின் போது, பிரித்தானியப் பிரதமர் சார்பாகப் பதிலளித்த போதே, துணைப் பிரதமர் நிக் கிளெக் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமருக்கான கேள்வி நேரத்தின் போது உரையாற்றிய, லிபரல் ஜனநாயகக் கட்சியின் துணைத்தலைவரான சைமன் ஹியூஸ், சிறிலங்காவின் மனிதஉரிமை நிலவரங்களின்படி, அங்கு நடக்கும் கொமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரித்தானியப் பிரதமரின் முடிவை ஆதரிக்க முடியாது என்று தெரிவித்தார். அத்துடன் சிறிலங்காவின் மோசமான ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளுக்கு நாம் எப்படி பதிலளிக்க வேண்டும் என்று விளக்கமளிக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் கொமன்வெல்த் அமைப்பு தாம் மனிதஉரிமைகளில் நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்று வெறுமனே கூறாது, மனிதஉரிமைகளுக்காக என்ன செய்தோம் என்பதைக் கூறுவதற்கு நாம் என்ன செய்யலாம் என்பது குறித்தும் விளக்கமளிக்க வேண்டும் என்றும் பிரித்தானியப் பிரதமரிடம் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்த அதே கட்சியின் தலைவரும், துணைப் பிரதமருமான நிக் கிளெக், அண்மைய போரின் போது மனிதஉரிமைகள் மீறப்பட்டுள்ள நிலையில், சிறிலங்காவில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது என்ற பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சரின் முடிவு சர்ச்சைக்குரியது என்றும் தெரிவித்துள்ளார். அதேவேளை, பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் பணியகப் பேச்சாளர் ஒருவர், பிரதமர் டேவிட் கெமரூன் நிச்சயமாக சிறிலங்கா மாநாட்டில் கலந்து கொள்வார் என்றும் தெரிவித்தார். சிறிலங்கா மனிதஉரிமை விவகாரங்களை உரிய வகையில் கையாள வேண்டும் என்பதை வலியுறுத்துவதும், அவர் அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று எனவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.