பக்கங்கள்

07 மே 2013

தமிழீழ தேசியத்தலைவர் பகவத் கீதையை அடிப்படையாக கொண்டே போரிட்டார்!

இலங்கை வரலாற்றில் எந்தவொரு போரும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெறவில்லையென ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக வரலாறு மற்றும் தொல்லியல்துறை பீட பேராசிரியர் ரி.ஜீ.குலதுங்க தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற தொல்பொருளியல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பேராசிரியர் குலதுங்க, "பிரபாகரன் போரில் ஈடுபட்டது பகவத் கீதையை அடிப்படையாகக் கொண்டுதான்'' என்று குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது: வரலாற்றை எடுத்துக்கொண்டால், நடந்த போர் நிச்சயமாக இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்திருக்காது. அது மதத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே இருந்திருக்கிறது. துட்டகைமுனுவின் போர் கூட இனவாதத்தின் அடிப்படையில்தான் நடத்தப்பட்டதாக கடந்த பல காலங்களில் கூறப்பட்டன. ஆனால் எந்தவொரு நூலிலும், ஆவணத்திலும் எல்லாளனுக்கும், துட்டகைமுனுவுக்கும் இடையிலான போர் இனவாதத்தின் அடிப்படையில் நடந்ததென்று குறிப்பிடப்படவில்லை. எல்லாள மன்னனைப் பற்றி மகாவம்சத்தில் 23 விதந்துரைகள் இருக்கின்றன. அதில் முதலாவது மற்றும் இறுதி விதந்துரைகளைத் தவிர ஏனைய எல்லாவற்றிலும் அவரைப்பற்றி நன்றாகத்தான் சொல்லப்பட்டுள்ளது. நமது நாட்டைப் பொறுத்தவரை கலாசாரம்கூட இந்தியக் கலாசாரத்தையே அடியொற்றி வந்திருக்கிறது. எமது நாட்டில் போரில் ஈடுபட்ட பிரபாகரன் கூட இந்திய நூலான பகவத்கீதையின் பல விடயங்களை அடியொற்றித்தான் அதில் குதித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார் பேராசிரியர் குலதுங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.