பக்கங்கள்

19 மே 2013

விடுதலைப் போராட்டம் தொடரும்-மாவை எம்.பி. சூளுரை

news"முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளின் மீது சத்தியம் செய்து விடுதலைக்காக தொடர்ந்தும் போராடுவோம்.'' இவ்வாறு நேற்று வவுனியாவில் சூளுரைத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா. "எமது உறவுகளை படுகொலை செய்தவர்கள் அதற்கான தண்டனையை என்றோ ஒருநாள் பெற்றே தீர வேண்டும். நிச்சயமாக அவர்கள் போர்க் குற்றவாளிகள் என ஐ.நா. பரிந்துரைக்கின்ற போது எங்களுக்கான விடுதலையும் நெருங்கிவிடும்'' என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் பிரதான நிகழ்வு நேற்று வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: 2009ஆம் ஆண்டில் முள்ளி வாய்க்காலில் அரச படைகளினால் பல்வேறு வகைகளிலும் படுகொலை செய்யப்பட்ட எமது தமிழ் உறவுகளின் தியாகம் ஒரு போதும் வீண்போகாது. அவர்களின் தியாகத்தில் தான் நாம் இன்று ஜனநாயக வழியில் பலமாகப் போராடுவதற்கான அத்திபாரம் அமைந்துள்ளது. உலகில் எந்தவொரு நாட்டுக்கும், இனத்திற்கும் நிகழாத துன்பம் இலங்கையில் தமிழ் மக்களுக்குத்தான் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் முள்ளி வாய்க்காலில் நடந்தேறியுள்ளது. தமிழ் உறவுகளின் உயிரிழப்புகள் ஒரு படுகொலை எனக் கருதியே அதனை ஒரு போர்க்குற்றமாக ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் ஆணையகமும், ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமும் ஏற்றுக்கொண்டுள்ளது எமது உறவுகளை படுகொலைசெய்தவர்கள் அதற்கான தண்டனையை என்றோ ஒருநாள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். நிச்சயமாக அவர்கள் போர்க்குற்றவாளிகள் என ஐ.நா. பரிந்துரைக்கின்ற போது எங்களுக்கான விடுதலையும் நெருங்கிவிடும். அது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் சாட்சியாகக் கிடைக்கும் விடுதலை என நாம் ஏற்போம் என்பதே இந்த நாளில் எமக்குத் தெளிவாகக் கிடைக்கும் செய்தி. இப்படித் தெரிவித்தார் மாவை எம்.பி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சி.சிறீதரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், எஸ்.வினோநோகராதலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், வீ.ஆனந்தசங்கரி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகனேசன், ஐக்கிய சோசலிஷக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய, கூட்டமைப்பின் வவுனியா நகரசபை பதில் தலைவரும் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணித் தலைவருமான எம்.எம்.ரதன் ஆகியோர் உட்படப் பலர் உரையாற்றினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.