பக்கங்கள்

31 மே 2013

லண்டனில் இருந்து வற்றாப்பளை வந்தவர் கைது!

லண்டனில் இருந்து வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்த வந்தவர் சிறிலங்கா காவல்துறையின் தீவிரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மயில்வாகனம் கணேசரூபன் (39 வயது) என்பவரே வற்றாப்பளையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த போது, நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 18 ஆண்டுகள் கழித்து பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பியிருந்தார். தம்மை தீவிரவாத புலனாய்வுப் பிரிவினர் என்று அடையாளப்படுத்திய ஆறு பேர் இவரை கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். அத்துடன், காலையில் வவுனியாவில் உள்ள தமது பணியகத்தில் வந்து சந்திக்கும்படி, குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர். எனினும் நேற்றுக்காலை வவுனியா சென்றபோது, கணேசரூபனை மேல் விசாரணைக்காக கொழும்புக்குக் கொண்டு செல்வதாகவும் சனிக்கிழமை வந்து பார்வையிடலாம் என்றும் கூறியதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வற்றாப்பளை ஆலய நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக வந்திருந்த தாம், அடுத்த வாரம் லண்டன் திரும்பிச் செல்லவிருந்த நிலையிலேயே தமது கணவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அவரது மனைவி சுகந்தினி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, மனிதஉரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரக அதிகாரிகளுக்கும் இதுதொடர்பாக முறையிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.