பக்கங்கள்

07 நவம்பர் 2013

லண்டனில் உள்ள மகனைப்பார்க்க துடிக்கும் முதியோர் இல்லத்தில் இருக்கும் தாய்!

யாழ்ப்பாணம், கைதடி முதியோர் இல்லத்திலுள்ள தாயொருவர் இலண்டனில் பொறியியலாளராக கடமையாற்றும் தன் மகனை பார்க்க வேண்டுமென்று முதியோர் இல்ல அதிகாரிகள் மற்றும் உறவினர்களிடம் கோரிக்கையொன்றையும் முன்வைத்துள்ளார். கைதடி முதியோர் இல்லத்தில் கடந்த பத்து வருடங்களாக வசித்து வரும் வயோதிபத் தாயான பூவேந்திரம் தவபோசனம் (வயது 61) என்பவரே இவ்வாறு கோரிக்கை முன்வைத்துள்ளார். இவர் நெல்லியடி, வதிரியைச் சேர்ந்தவராவார். இவர் தொடர்பில் தகவலளித்த கைதடி முதியோர் இல்ல அத்தியட்சகர் த.கிருபாகரன் கூறியதாவது, 'குறித்த பெண் திருமணமான ஒரு மாத காலத்தில் கணவனை இழந்ததாகவும் இவருக்கு ஒரே ஒரு மகன் இருப்பதாகவும் எமக்கு தெரிவிக்கப்பட்டது. கணவனின் இழப்பு காரணமாக இவர் மனநலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 10 வருடங்களக்கு முன்னர் கைதடி முதியோர் இல்லத்தில் அவரது உறவினர்களால் அனுமதிக்கப்பட்டார். குறித்த பெண்ணின் மகன் உறவினர்களால் வளர்க்கப்பட்டு தற்போது அவர் லண்டனில் பொறியியலாளராக கடமை புரிகின்றார். இந்நிலையில், இவர் ஓரளவு மனநலம் தேறி பழைய நினைவுகளுக்கு திரும்பி தனது மகனின் பெயர் மற்றும் உறவினர்களின் பெயர்களை கூறி வருகின்றார். தற்போது அவர் தனது மகனை தேடுவதாகவும் மகன் தன்னை வந்து பார்ப்பாரா? என குறித்த தாய் பாசம் மேலிட்ட நிலையில் ஏங்கி அதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தித் தருமாறும் எம்மிடம் கோருகின்றார். இதனால், கைதடி முதியோர் இல்லத்தில் வசிக்கும் தாயைப் பார்ப்பதற்காக அவரது மகன் எங்கு இருந்தாலும் இல்லத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்' என்று முதியோர் இல்ல அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.