பக்கங்கள்

17 நவம்பர் 2013

வவுனியாவில் மாபெரும் தீப்பந்த போராட்டம்!

வவுனியா பிரஜைகள் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெறும் மாபெரும் தீப்பந்த போராட்டம் பெருந்திரளான மக்கள் பங்களிப்புடன் மிகவும் எழுச்சியாக நடைபெற்றுவருகிறது. காலை 11 மணியளவில் , வவுனியா கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமான இந்த தீப்பந்த போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துக்கொண்டுள்ளனர். இத் தீப்பந்தப்போராட்டமானது தமிழ் மக்களின் சமகால பிரச்சினைகள் பலவற்றை மையப்படுத்தியதாக நடைபெற்றுவருகிறது. காணாமல் போனோர் விடயத்தில் இலங்கை அரசே முழுப் பொறுப்பேற்கவேண்டும் ,அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் ,நில ஆக்கிரமிப்பு முற்றாக நிறுத்தப்படவேண்டும்,தமிழர் பிரதேசத்தில் , இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கில் இடம்பெறும் சகல திட்டமிட்ட குடியேற்றத் திணிப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும், சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடு நிறுத்தப்பட வேண்டும், பௌத்த மயமாக்கல் நிறுத்தப்படவேண்டும் ,காடழிப்பு மற்றும் இயற்கை ,கனியவள சுரண்டல்கள் நிறுத்தப்படவேண்டும், மனிதத்துவத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் அனைத்திற்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பவற்றை மையப்படுத்தி போராட்டம் நடைபெறுகின்றது. இப்போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு ," சர்வதேச விசாரணை " வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோசங்களை எழுப்பி வருகின்றனர். கையில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு மக்கள் நடத்தும் இந்த போராட்டத்தில் பல பிரமுகர்கள் தம்மை இணைத்துக்கொண்டு வருகின்றனர். இப்போது அங்கே கலந்து கொண்டுள்ள பிரமுகர்கள் உரையாற்றிவருகின்றனர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சிவசக்தி ஆனந்தன் , செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் ரவிகரன், சத்தியலிங்கம் ஆகியோரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சண் மாஸ்டர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் எழுச்சி மிகு உரையாற்றி வருகின்றனர். வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனதுரையில் ,கார்த்திகைத் திருநாளில் வீடுகளை ஏற்றுகிற தீபத்தை நாங்கள் இன்று கைகளிலும் நெஞ்சிலும் ஏந்தி எங்கள் உரிமைகளுக்காக போராடுகிறோம்." யாழில் நடைபெற்ற போராட்டம் மிகவும் எழுச்சியாக நடந்தது. தடைகளை மீறி போராட்டங்களை முன்னெடுக்க தமிழர் தாயகப்பிரதேசமெங்கும் மக்கள் பேரெழுச்சியுடன் முன் வரவேண்டும். மக்கள் புரட்சி வெடிக்கும்போதே எமக்கு சுதந்திரம் கிடைக்கும் . இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சி கொண்ட எங்களை எந்த சக்தியாலும் ஒடுக்கி விட முடியாது . நான் மக்களின் எழுச்சி மிகு போராட்டங்களுக்கு என்றும் துணை நிற்பேன். என்றார். தொடர்ந்தும் நிகழ்வு மக்கள் பேராதரவுடன் நடைபெற்று வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.