பக்கங்கள்

06 நவம்பர் 2013

சிங்களச்சிப்பாய்தான் இசைப்பிரியா பிடித்து செல்லப்படும் காணொளியை கொடுத்தார்!

இசைப்பிரியா 
இசைப்பிரியா இலங்கை இராணுவத்தினரால் உயிருடன் பிடித்துச் செல்லப்படுகின்ற வீடியோவை இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவரே தனக்குத் தந்தார் என அதன் தயாரிப்பாளரான சனல் 4 இயக்குநர் கெலும் மக்ரே அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். இந்தக் காட்சிகளை ஏற்கனவே இலங்கை அரசு பார்த்திருக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியா இராணுவத்தினரால் உயிருடன் பிடித்துச் செல்லப்படும் வீடியோவை சனல் 4 தொலைக்காட்சி கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது. இசைப்பிரியா கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சிகளையும் கடந்த வருடம் சனல் 4 தொலைக்காட்சியே வெளியிட்டிருந்தது. இந்தக் காட்சிகள் மற்றும் இலங்கையின் இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் இரு ஆவணப் படங்களை தயாரித்து வெளியிட்ட கெலும் மக்ரேக்கு இந்தியா செல்வதற்காக வீசா அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியின் போது, இசைப்பிரியாவின் வீடியோ போலியானது என்றும் அது நாடகம் என்றும் இலங்கை அரசு மறுத்திருப்பது தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், எல்லாவற்றையும் எடுத்த எடுப்பிலேயே மறுக்கும் போக்கை இலங்கை அரசு கைவிட வேண்டும். இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த வீடியோ காட்சிகளை இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவர் தனது நாட்டு அரசிடம் கொடுக்காமல் எங்களிடம் கொடுத்திருக்கிறார். இது, இலங்கை அரசு இந்தக் காட்சிகளை ஏற்கனவே பார்த்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. எல்லா வீடியோ காட்சிகளையும் பார்த்த பின்னர் இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கத் தவறிவிட்டதாகவே தோன்றுகின்றது. இது உண்மையில் சிக்கலான பிரச்சினை என்றும்
 குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.