பக்கங்கள்

10 நவம்பர் 2013

சந்திரசிறியின் உரையை புறக்கணிக்கப்போவதாக அனந்தி தெரிவிப்பு!

வடக்கு மாகாணசபையின் நாளைய பேரவை அமர்வின் போது இடம்பெற தீர்மானிக்கப்பட்டுள்ள ஆளுநர் சந்திரசிறியினது சிறப்புரையினை புறக்கணிக்க தான் முடிவு செய்திருப்பதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு அனந்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இராணுவத் தளபதியாகவிருந்த வேளையிலேயே ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் காணாமல் போயிருந்தனர். குறிப்பாக கிருசாந்தி குமாரசாமி பாலியல் வன்புணர்வுக்கு உட்பட்டு கொல்லப்பட்டதும் இவரது காலத்திலேயே எனத் தெரிவித்த அனந்தி, இவர் தளபதியாக இருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் பெண்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்ததாகவும் கூட்டிக் காட்டியுள்ளார். இவை தவிர இவரை வவுனியா தடுப்பு முகாம்களின் இணைப்பாளராக நியமித்த வேளையிலேயே முகாம்களிலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வடிகட்டப்பட்டு காணாமல் போகவும் செய்யப்பட்டிருந்தனர். இவற்றை தாம் மறக்க முடியாதென அனந்தி சசிதரன் தெரிவித்தார். அத்துடன் முதலமைச்சரே ஆளுநரை வேண்டாம் என்று சொன்ன பின் அவரது உரையை கேட்கும் தேவை இல்லை எனவும் தெரிவித்துள்ளார். முன்னதாக மற்றொரு மாகாணசபை அங்கத்தவர் கே.சிவாஜிலிங்கம் தான் நாளைய ஆளுநர் சந்திரசிறியினது சிறப்புரையினை பகிஸ்கரிக்கப் போவதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மாகாண சபையின் அங்கத்தவரான சுகிர்தன், ஆளுநரின் சிறப்புரையை புறக்கணிக்க உள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்ட அவர் 'எல்லாவற்றிற்கும் மேலாக கூட்டமைப்பினரை அதன் தலைவர்களை நாய்கள் என பகிரங்கமாகப் பேசியவர் இந்த ஆளுநர். நடந்து முடிந்த தேர்தலில் கூட கூட்டமைப்பின் தேர்தல் தோல்விக்காக முழு அளவில் வேலை செய்தவர். பகிரங்கமாக மேடையேறி ஆளும் தரப்பின் வெற்றிக்காக பாடுபட்டவர். இவருக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டுமென்ற எந்த தேவையுமில்லை' எனக் கூறிய அவர் தானும் நாளைய தினம் ஆளுநர் சிறப்புரையினை பகிஸ்கரிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இன்று வரை கூட்டமைப்பினை கிள்ளு கீரையாக கருதுபவர் சந்திரசிறி. அவருக்கு எமது நிலைப்பாட்டினை சொல்லி வைக்க எமது ஒற்றுமையான வெளிநடப்பு முக்கியமானதென மற்றுமொரு அங்கத்தவர் தெரிவித்த போதும் அவர் உடனடியாக தனது பெயரை குறிப்பிடவிரும்பவில்லை. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த பல கூட்டமைப்பு அங்கத்தவர்களும் நாளைய ஆளுநரது சிறப்புரையினை பகிஸ்கரிக்கலாம் என தெரியவருகின்ற போதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.