பக்கங்கள்

09 நவம்பர் 2013

கோமா நிலைக்குச் செல்லும் அபாயத்திலிருந்து பரமேஸ்வரன் காப்பாற்றப்பட்டார்!

தமிழினப் படுகொலையாளி மகிந்த ராஜபக்சவிற்கு அங்கீகாரம் அளிக்கும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் முடிவை மீளப்பெறுமாறு பிரித்தானியப் பிரதமரை வலியுறுத்தி பட்டினிப் போரில் ஈடுபட்ட சுப்ரமணியம் பரமேஸ்வரன் குறுகிய நேர இடைவெளிக்குள் கோமா நிலைக்கு செல்லும் அபாயத்திலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார். Parames-on-ambulanceகடந்த திங்கட்கிழமை முதல் இலண்டனில் உள்ள பிரித்தானியப் பிரதமரின் வாசத்தலம் முன்பாக தொடர்ச்சியாகப் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பரமேஸ்வரனின் உடல்நிலை கடும் குளிர், பலத்த காற்று வீச்சு, கன மழை ஆகியவற்றின் விளைவாக 07.11.2013 வியாழக்கிழமை மாலை முதல் பாதிப்பிற்கு ஆளாகியிருந்தது. வியாழக்கிழமை இரவு முதல் கடும் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த பரமேஸ்வரனின் உடல்நிலை இன்று வெள்ளிக்கிழமை காலை மேலும் மோசமடைந்தது. எனினும் தனது பட்டினிப் போரைத் தொடர்வதில் உறுதியாக இருந்த பரமேஸ்வரன், அவரது உடல்நலம் கருதிப் போராட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்திய தமிழின உணர்வாளர்கள் – செயற்பாட்டாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தார். இந்நிலையில் இன்று நண்பகலை அண்மித்த வேளையில் பரமேஸ்வரனை செவ்வி காண்பதற்கு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் வருகை தந்திருந்த பொழுது அவர் மயக்க நிலையை நோக்கிச் செல்லத் தொடங்கினார். param-1இதனையடுத்து விரைந்து செயற்பட்ட அங்கிருந்த தமிழின உணர்வாளர்கள், இலண்டன் முதலுதவிப் பிரிவினருக்கு அவசர தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு முதலுதவியாளர்களை பட்டினிப் போர் நடைபெறும் பகுதிக்கு வரவழைத்தனர். இதனையேற்றுத் துரிதமாக தலத்திற்கு விரைந்த இலண்டன் முதலுதவிப் பிரிவினர், பரமேஸ்வரனைப் பூர்வாங்கப் பரிசோனைக்கு உட்படுத்திய பின்னர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் போவதாக அறிவித்தனர். எனினும் காவுகட்டிலில் ஏற்றப்படும் பொழுது மீண்டும் பரமேஸ்வரன் மயக்கநிலைக்கு சென்றதை அடுத்து முதலுதவி வண்டிக்குள் வைத்து வண்டி நகர்ந்து கொண்டிருந்த பொழுதே அவருக்கு முதலுதவியாளர்களால் முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர் இலண்டன் சென்.தொமஸ் மருத்துவமனை நோக்கி விரைந்த இலண்டன் முதலுதவிப் பிரிவினர் பரமேஸ்வரனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். param-3அங்கு அவரை உடனடியாக சிகிச்சைக்கு உட்படுத்திய இரண்டு மருத்துவர்கள், அவரது குருதியில் சீனியின் மட்டம் 2.1 ஆக ஆபத்தான நிலையில் இருந்ததைக் குறிப்பிட்டதோடு, உரிய நேரத்திற்குள் அவருக்கு முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்காத பட்சத்தில் அவர் கோமா நிலைக்கு சென்றிருக்கக்கூடும் அல்லது பாரிசவாதத்திற்கு ஆளாகியிருக்கக்கூடும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்தனர். ஏற்கனவே கடந்த 2009ஆம் ஆண்டு 23 நாட்களுக்குப் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டவர் என்ற வகையில் பரமேஸ்வரனின் உடல்நலம் மேலும் பட்டினிப் போராட்டங்களைத் தாங்கிக் கொள்ளும் நிலையில் காணப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டிய மருத்துவர்கள், இதன் காரணமாகவே ஐந்து நாட்களில் அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் குறிப்பிட்டனர். இந்நிலையில் இனியும் பட்டினிப் போராட்டத்தில் பரமேஸ்வரன் ஈடுபடுவது அவரது உயிருக்கு ஆபத்தாக முடியும் என்றும் இரு மருத்துவர்களும் எச்சரித்தனர். இதனையடுத்து பரமேஸ்வரனின் அருகில் நின்றவர்கள் விடுத்த கோரிக்கையையும், மருத்துவர்களின் எச்சரிக்கையையும் ஏற்றுத் தனது பட்டினிப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்குப் பரமேஸ்வரன் இணங்கினார். எனினும் மேலும் சில மணிநேரத்திற்கு அவரைத் தொடர்ச்சியான கண்காணிப்பில் வைத்திருந்த மருத்துவர்கள், அவரது உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியதை அடுத்து இன்று இரவு அவரை வீடு செல்வதற்கு அனுமதித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.