பக்கங்கள்

17 நவம்பர் 2013

ஊர்காவற்றுறை தம்பாட்டி மக்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்!

வடமாகாணசபைத் தேர்தலின் பின் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மீது ஈ.பி.டி.பி யினராலும், அரசின் புலனாய்வாளர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறைகளின் தொடர்ச்சியாக யாழ்.ஊர்காவற்றுறை தொகுதி தம்பாட்டி பிரதேச மக்கள் பொலிசாரினாலும்,புலனாய்வாளர்களாலும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அப்பிரதேசத்தைச் சேர்ந்தவரான பொலீசாருடன் சேர்ந்தியங்கும் 28 வயதுடைய காண்டீபன் எனும் பேர்வழியின் உதவியுடன் அப்பகுதி சுவற்றில் “புலிகள் மீண்டும் வருவார்கள் ” என கரியால் எழுதுவிக்கப்பட்டு, பின்னர் அப்பகுதிக்கு வந்த பொலிசாரும், புலனாய்வாளர்களும் அப்பகுதிமக்களை அச்சுறுத்தியுள்ளனர். 06 பேர் கொண்ட பட்டியல் ஒன்றை வைத்துள்ள பொலிசார் அவர்களை இது தொடர்பாக தேடிவருவதாக கூறியுள்ளனர். அப்படியலில் உள்ள அனைவரும் கடந்த மாகாணசபைத்தேர்தலில் கூட்டமைப்பின் வெற்றிக்காக செயற்பட்டவர்கள் என மக்கள் தெரிவித்தனர். இவ்விடயம் தொடர்பாக அப்பகுதி மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்களுக்கு தெரிவித்ததையடுத்து நேற்று16.11.2013 சனிக்கிழமை பிற்பகல் அப்பகுதிக்கு நேரில் சென்ற மாகாணசபை உறுப்பினர் மக்களுடன் கலந்துரையாடி , இப்பிரச்சனையை உரியவர்களிடம் எடுத்துச்சென்று தீர்வுகாண முயற்சிப்பதாக உறுதியளித்தார். அத்துடன் அப்பகுதியில் நிலவும் குடிதண்ணீர் பிரச்சனை பற்றியும் மக்கள் மாகாணசபை உறுப்பினரிடம் தெரிவித்தனர். இது பற்றியும் உரியவர்களிடம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். மாகாணசபை உறுப்பினருடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ப.தர்சானந்தும் உடன் சென்றிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.