பக்கங்கள்

15 நவம்பர் 2013

யாழ்,போராட்டக் களத்தில் சனல்4!

நீண்டதொரு இடைவெளியின் பின்னர் காணாமல் போனோரது உறவுகள் முன்னெடுத்த போராட்டம் யாழ்நகரின் இயல்பு வாழ்க்கையினை இன்று பாதிக்கச்செய்துள்ளது. பிரித்தானிய பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கின்ற நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்களுடைய உறவுகளை தேடி கண்டுபிடித்து தருமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதை அடுத்தே அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டகாரர்கள் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையினில் அவர்கள் பிரிட்டன் பிரதமரை சந்திக்காத வகையில் பிரதம நூலகம் முன்பதாக பொலிஸ் வாகனங்களை நிறுத்தி அவர்களை வழிமறித்து வைத்திருந்தது. மறுபுறத்தே அரச ஆதரவு படைத்தரப்பின் ஏற்பாட்டில் 50 பேரைக்கொண்ட கும்பலொன்று சனல்-4 இற்கு எதிராகவும் அரசிற்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்த ஏற்பாடாகியிருந்தது. பிரிட்டிஸ் பிரதமர் அவர்களை பார்வையிடும் வகையில் நூலக நுழைவாயிலினில் இவ்வேற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமக்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் இத்தகைய ஏற்பாடுகள் மக்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்த கட்டுப்பாட்டினை தகர்த்து மக்கள் பொலிஸாரை மீறி நுழைவாயிலினை நோக்கி செல்ல முற்பட்டனர். இந்நிலையில் அவர்களை பெண்கள் மதகுருமார் என பாகுபாடேதுமின்றி தாக்க பொலிஸார் முற்பட வன்முறை வெடித்தது. பொலிஸ் தடையினை தாண்டி புறப்பட்ட மக்கள் அங்கிருந்து சென்று பிரதான நுழைவாயிலை முற்றுகையிட முற்பட அங்கு ஏற்கனவே வந்து கூட்டமைப்பின் மூவர் அணியினை சந்தித்துக் கொண்டிருந்த பிரிட்டன் பிரதமர் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியிருந்தார். இதனிடையே அழைத்து வரப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட கும்பல் தப்பி ஒடியிருந்தது. எனினும் பிரதமருடன் வருகை தந்திருந்த ஊடகவியலாளர்கள் மக்களது உணர்வுகளை புரிந்து அறிக்கையிடுவதில் ஈடுபட்டிருந்தனர். சனல்-4 அணி நேரடியாக தனது அறிக்கையிடலை செய்திருந்தது. இதனிடையே தமிழத்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டகாரர்கள் கோஸம் எழுப்பியிருந்தனர். மூடப்பட்ட காரினுள் மக்களை சந்திக்காது தப்பி செல்ல முற்பட்டவேளை இந்நெருக்கடிக்குள் அவர் அகப்பட்டுக்கொண்டார். எனினும் பின்னர் அவரும் நூலக பின் கதவினால் சென்றிருந்தார். எனினும் தமக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இன்றைய சந்திப்பு பற்றி தகவல் தரும் வரை விலகமாட்டோமெனக ;கூறி மக்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.