பக்கங்கள்

18 நவம்பர் 2013

நிந்தவூரில் அதிரடிப்படையுடன் மக்கள் முறுகல்!

நிந்தவூர் கடற்கரை பகுதியில் பொதுமக்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. நிந்தவூர் பகுதியில் இரவு வேளைகளில் தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்தல் மற்றும் கொள்ளையர்களை கண்டுபிடித்தல் தொடர்பில் விசேட விழிப்பு குழுவொன்று அமைக்கப்பட்டு ஆராயப்பட்டது. இதன் பிரகாரம் இரவு 9 மணிக்கு பின்னர் வீடுகளிலிருந்து வெளியே செல்கின்றவர்கள் தங்களுடைய ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை எடுத்துசெல்லவேண்டும் என்று அந்த குழு தீர்மானித்தது. அந்த தீர்மானத்தை பள்ளிவாயில்களின் ஊடாக பொதுமக்களுக்கு அறிவித்தது. இந்நிலையில், விசேட அதிரடிப்படையினர் அணியும் ஆடைகளை ஒத்த ஆடைகளை அணிந்து நிந்தவூர் கடற்கரை பகுதிக்கு வந்த ஐந்து பேர் அடங்கிய குழுவினர் கடற்கரையில் வைத்து ஆடைகளை மாற்றிக்கொண்டு நேற்றிரவு ஊருக்குள் வருவதை கண்ட பொதுமக்கள் அவர்களை சுற்றிவளைத்து ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு கேட்டுள்ளனர். ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய அவர்கள், தங்களை சுற்றிவளைத்த மக்களை தாக்கிவிட்டு தப்பியோடுவதற்கு முயன்றுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த விசேட அதிரடிப்படையினர் பொதுமக்களை தாக்கிவிட்டு அவர்களை மீட்டு சென்றுள்ளனர். இதனை கண்டித்து நிந்தவூர் பகுதியில் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டதுடன் நிந்தவூர் ஊடான போக்குவரத்துக்களும் தடைப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.