பக்கங்கள்

20 நவம்பர் 2013

உள்ளக விசாரணையில் எமக்குத் திருப்தியில்லை-கமரூன்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அந்நாட்டு அரசினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் முழுமையான சுயாதீனமுடையவையாக அமையவில்லை. அந்த விசாரணைகளில் பிரிட்டனுக்குத் திருப்தி இல்லை. இவ்வாறு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் பிரதமர் டேவிட் கமரூன். "யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் "உதயன்' நாளிதழின் நம்பமுடியாத துணிச்சல் கொண்ட ஊடகவியலாளர்களை பிரிட்டன் ஊடகவியலாளர்களுடன் சேர்ந்து நான் சந்தித்தேன். அவர்களின் சகாக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளார்கள். மேலும் பலர் தாக்கப்பட்டு, அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்'' என்றும் கமரூன் அங்கு கூறினார். போர்க்குற்ற விசாரணை மிக அவசியம். பொதுநலவாயத்தின் விழுமியங்களைப் பாதுகாக்கவே கொழும்பு மாநாட்டில் நான் கலந்துகொண்டேன். மிகவும் சர்ச்சைக்குரிய விவகாரங்களில் தலையீடு செய்வதைத் தவிர, அதனைப் புறக்கணிப்பது எனது கடமையல்ல. பல பத்தாண்டுகால உள்நாட்டுப் போர் இடம்பெற்ற இலங்கைக்கு நீதி, நிலையான தீர்வு, ஆற்றுப்படுத்தல் போன்றன மிக முக்கிய தேவைப்பாடாக உள்ளன. இலங்கை, தன் மீதான போர்க்குற்றச் சாட்டுக்கள் தொடர்பான விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் இதில் அனைத்துலகத் தலையீடு இடம்பெறும். என்றும் கமரூன் தனது உரையில் குறிப்பிட்டார். இதேவேளை, இந்தப் பிரச்சினையை இப்படியே விட்டுவிட முடியாது. கனடா மற்றும் இந்திய நாடுகளின் தலைவர்கள் இலங்கையில் இடம்பெறும் உச்சி மாநாட்டைப் புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில், இதில் பங்குபற்றுவதற்காக கமரூன் அங்கு செல்வது சரியா அல்லது தவறா எனப் பிரிட்டனின் எதிர்க் கட்சித் தலைவரும், தொழிற்கட்சித் தலைவருமான எட்வேட் மில்லிபாண்ட் நாடாளுமன்றில் கேள்வியயழுப்பினார். பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டின் இறுதியில், மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாகக் குறிப்பிடப்படவில்லை எனவும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்க வேண்டுமா அல்லது இல்லையா என்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்படவில்லை எனவும் மிலிபாண்ட் குறிப்பிட்டார். இலங்கையில் நிலவும் மனித உரிமை மீறல்கள் பொதுநலவாய அமைப்பின் விழுமியங்களுடன் முரண்பாட்டை ஏற்படுத்துகின்றன. இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பான உண்மை உரைக்கப்படுவதைப் பிரிட்டன் நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். இதன்மூலம் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் எனவும் மிலிபாண்ட் மேலும் சுட்டிக்காட்டினார். இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதென்கின்ற தனது தீர்மானமானது 'நிகழ்ச்சி நிரலை வடிவமைக்கவும், உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் முதன்மையான பிரச்சினையை வெளிச்சமிட்டுக் காட்டவும் உதவுகிறது எனவும் வடக்குக்கு பயணம் செய்த முதலாவது அனைத்துலக நாட்டுத் தலைவரான கமரூன் அங்கு கூறினார். பிரிட்டன், ஐ.நாவின் ஊடாக இலங்கைமீது அழுத்தம் கொடுப்பதாகவும், இறுதி ஐந்து மாத காலப் போரின்போது இடம்பெற்ற மீறல்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துவதாகவும், இதுவே இலங்கையில் நிலையான நீண்டகால மீளிணக்கப்பாடு தோன்ற வழிவகுக்கும் எனவும் கமரூன் மேலும் குறிப்பிட்டார். 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் 2013 இல் இலங்கையில் உச்சி மாநாடு நடத்துவதெனத் தீர்மானித்தபோது அதற்கு முன்னைய தொழிற்கட்சி அரசு அங்கீகாரம் வழங்கியதாகவும், மில்லிபாண்ட் சந்தர்ப்பத்துக்கேற்ப, இரட்டை நிலைப்பாட்டுடன் இலங்கையின் பிரச்சினையை அணுகுவதாகவும் கமரூன் குற்றம் சுமத்தினார். நான் இந்த உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளாமல் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது விருப்பிற்கேற்ப மாநாட்டின் நிகழ்ச்சி நிரலைத் தயாரித்து நடத்த அனுமதிப்பதா அல்லது எமது பொதுநலவாய அமைப்பின் பங்காளிகளுடன் இணைந்து எமது நலன்களை நிகழ்ச்சி நிரலில் இணைப்பதற்காக இந்த உச்சி மாட்டில் கலந்துகொள்வதா என்கிற இரண்டு தெரிவைக் கொண்டிருந்தேன். இறுதியில் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு எமது விழுமியங்களைப் பாதுகாப்பதெனத் தீர்மானித்தேன். இதன்மூலம் என்னால் முடிந்தளவு முன்னேற்றத்தை ஏற்படுத்த விரும்பினேன். நான் இதில் கலந்துகொண்டதானது பொதுநலவாயத்துக்கும், இலங்கை மற்றும் பிரிட்டன் ஆகியவற்றுக்கான சரியான தீர்வாகும் என நம்புகிறேன்'' என்றும் கமரூன் தனது உரையில் கூறினார். பிரிட்டன் பிரதமரின் நாடாளுமன்ற உரையின் பின்னர் அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இலங்கை அரசின் செயற்பாடுகள் தொடர்பிலும், சனல் - 4 ஊடகவியலாளர்கள் அரசினால் திட்டமிட்டு அச்சுறுத்தப்பட்டமை குறித்தும் காரசாரமான விவாதங்களை முன்வைத்தனர்.தனது வடக்குப் பயணம் குறித்தும் அங்கு தான் கண்டறிந்த விடயங்கள் அனைத்தையும் பிரதமர் கமரூன் தனது உரையில் விரிவாக விளக்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.