பக்கங்கள்

31 அக்டோபர் 2013

பெண்கள் மீது இராணுவ வன்முறைகள் அதிகம்-அனந்தி

ஒரு பெண் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டால் அதை பெரிதாக்கிப் பாதிக்கப்பட்ட பெண்ணை இழிவுபடுத்தும் நிலைமையே இங்கு காணப் படுகின்றது. இந்த நிலை மாற வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். யாழ்ப்பாண மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பெண்கள் விழிப்புணர்வு தொடர்பான குறும்பட மற்றும் அசையும் படவெளியீட்டு விழா திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்: ஆண்களுக்கு மேலான சுதந்திரம் ஒரு காலத்தில் பெண்களுக்கும் இருந்தது. பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகள் தொடர்பில் பெரியளவில் அறியப்படாவிட்டாலும் இராணுவ வன்முறைகள் அதிகளவில் இடம்பெறுகின்றன. எமது சமூகத்தில் ஒரு பெண் வன்புணர்வுக்கு உட்படுத் தப்பட்டால் அதைப் பெரிது படுத்திப் பாதிக்கப்பட்ட பெண் இழிவுபடுத்தப்படுவதுபோல உலகத்துக்கே தெரியப்படுத்துகின்றனர். வன்புணர்வு செய்திகளில் பெண்கள் காட்சிப் பொருளாக மாற்றப்படுவதால்தான் பாதிக்கப்பட்ட பெண்கள் தமக்கு நேர்ந்த வன்முறைகளை வெளியே கூற அஞ்சுகின்றனர். பெண்கள்  மேலும் வலுவூட்டப்பட வேண்டிய நிலைமை இங்கு காணப்படுகின்றது. சட்டங்களில் மாற்றத்தை கொண்டுவருவதன் மூலம் எதையும் மாற்றிவிட முடியாது. மக்கள் மனங்களில் மாற்றம் வேண்டும். சமூகத்தில் மாற்றம் வேண்டும். மக்களுக்கு பெண்கள்தான் வன்முறை பற்றிய விழிப்புணர்வை வழங்கக் கிராம மட்டத்தில் இருந்து செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.