பக்கங்கள்

03 அக்டோபர் 2013

தேசியத் தலைவரின் முல்லை வதிவிடம் படைகளால் குண்டு வைத்து அழிப்பு!

தேசியத் தலைவருக்கு பயந்த தெற்கு ஆட்சியாளர்கள் இப்போதும் அவரது வதிவிடங்களிற்கும் அஞ்சும் பரிதாபம் தொடர்கின்றது. முன்னதாக வல்வெட்டித்துறையிலுள்ள அவரது பிறந்த வீடு குடாநாட்டிற்கு செல்பவர்களது சுற்றுலா மையங்களுள் ஒன்றாகியிருந்த நிலையில் அது இரவோடிரவாக இடித்து தள்ளப்பட்டது. கனரக வாகனங்கள் சகிதம் வீட்டின் இடிபாடுகளை கூட படையினர் தடையமில்லாத வகையில் அகற்றியிருந்தனர். ஏற்கனவே விமானக்குண்டு வீச்சிலும் பின்னர் படையினராலும் சேதமாக்கப்பட்டிருந்த வீடே பின்னர் சூறையாடப்பட்டு தடையமேதுமின்றி இடித்தழிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முல்லைத்தீவின் புதிக்குடியிருப்பு பகுதியில் தேசியத் தலைவர் வசித்து வந்த வதிவிடம் எனக் கூறப்படும் இடத்தை
 இன்று இலங்கைப்படையினர் குண்டுவைத்து தகர்த்துள்ளனர். முன்னதாக சுற்றாடலில் குடியமர்ந்திருந்த மக்களை வெளியேற்றிய படையினர் பின்னர் மூன்றடுக்கு பதுங்கு குழியுடன் கூடிய வதிவிடத்தை குண்டு வைத்து தகர்த்துள்ளனர். இறுதி யுத்தத்தின் பின்னர் சுற்றுலாப்பயணிகளது முக்கிய பார்வையிடமாக இது இருந்து வந்திருந்தது. எனினும் அதனை பார்வையிடுவதற்கும் புகைப்படமெடுத்து பேணி பாதுகாக்கவும் பலரும் ஆர்வம் கொண்டிருந்தனர்.ஒரு கட்டத்தில் பொதுமக்களை கட்டுப்படுத்த முடியாத படையினர் அண்மைக்காலமாக அதனை பார்வையிட தடை விதித்து இழுத்து மூடியுமிருந்தனர். இவ்வதிவிடமே இன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக படை அதிகாரிகள் சிலர் குறித்த வதிவிடத்தை குண்டு வைத்து தகர்க்கவுள்ளதாக அப்பகுதி மக்களிடையே தெரிவித்துள்ளனர். தகவல் வெளியானதையடுத்து மக்களிடையே பெரும் பரபரப்பு எழுந்திருந்தது.அந்நிலையில் பெரும் சத்ததுடன் இன்றிரவு குண்டு வெடிக்க வைக்கப்பட்டு அது அழிக்கப்பட்டுள்ளது.எனினும் குறித்த பகுதிக்கு இதுவரை பொதுமக்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.