பக்கங்கள்

30 அக்டோபர் 2013

யாழ்ப்பாண இடப்பெயர்வின் நினைவு நாள் இன்றாகும்

ஈழத்தமிழர்களின் துன்ப வரலாற்றில் ஒன்றாக கருதப்படும் யாழ். இடப்பெயர்வின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் நாள் யாழ்,குடாநாட்டு மக்களின் வாழ்வில் மறக்க முடியாத பெரும் துன்ப சுமையாக அமைந்த நாளாகும். எறிகணைத்தாக்குதல், விமான குண்டு வீச்சுக்கள் இராணுவ நகர்வுகள், என இடப்பெயர்வுகளை சந்தித்து வந்த யாழ் குடாநாட்டு மக்கள் ஒரே இரவில் ஒன்றாய்க் கூடி வாழ்ந்த மண்ணைவிட்டு தூக்கியெறியப்படுவோம் என எவரும் நினைத்திருக்க மாட்டார்கள். வேரோடும் வேரடி மண்ணோடும் நகர்ந்து சென்ற பெரும் துயரம் அன்றுதான் நிகழ்ந்தது. யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பாரிய இன அழிப்பு நடவடிக்கையை இராணுவம் மேற்கொள்ள இருப்பதால் உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களான தென்மராட்சி வன்னிப் பகுதிகளுக்கு சனத்தை இடம்பெயருமாறு விடுதலைப்புலிகள் ஒலிபெருக்கியில் அறிவித்ததை கேட்டு அதிர்ச்சியடைந்தவர்களாக அத்தனைபேரும் தங்கள் வேர்களைப் பிடுங்கி நடந்தார்கள். எங்கே போவது, என்ன செய்வது என்னும் எந்தச் சிந்தனையும் இன்றி உயிர் பிழைக்க வேண்டும் என்ற நோக்கோடு மட்டும் நடந்தார்கள். யாழ் குடாநாட்டினை வடபகுதியின் மற்றைய பிரதேசங்களுடன் இணைத்திருந்த வெறும் இரண்டு வீதிகளினூடாக 5 லட்சம் மக்கள் ஓர் இரவு விடிவதற்குள் கடந்து செல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்ட அந்த அவலத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இடைவழியில் நடந்த மரணங்களும், பேரவலங்களும் சந்தித்த 5 இலட்சம் மக்கள் தென்மராட்சியையும் கிளாலி ஊடாக வன்னியையும் அடைந்தனர். இடைவழியில் விமான குண்டு வீச்சுக்களால் இறந்து போனவர்கள் பலர். 24மணிநேரமாக நடந்து நடந்து களைத்து போன மக்கள் அனுபவித்த பேரவலம் ஈழவிடுதலைப்போராட்ட வரலாற்றில் மக்கள் அனுபவித்த பெருந்துன்பங்களில் ஒன்றாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.