பக்கங்கள்

05 அக்டோபர் 2013

வாக்களித்த மக்களுக்கு ஆப்படித்த சம்பந்தனுக்கு மக்கள் எதிர்ப்பு!

வடமாகாண சபையின் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவியேற்பதை தாம் விரும்பவில்லை என்று வடக்கில் உள்ள பெரும்பான்மையான மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதிக்கு முன்பாக பதவியேற்கவுள்ளார் என்று நேற்றுத் தகவல் வெளியானது. வடக்கு மக்களுக்கு இந்தச் செய்தி கடும் அதிர்ச்சியை அளித்தது. இந்த முடிவை விமர்சித்து முகநூல் போன்ற சமூக வலைத் தளங்களிலும் காரசாரமான விமர்சனங்கள் உடனடியாப் பதியப்பட்டன. கூட்டமைப்பின் இந்த முடிவு குறித்து "உதயன்' மக்களிடம் கருத்துக் கேட்டது. வடமாகாணத்தைச் சேர்ந்த வைத்திய அதிகாரிகள், ஆசிரியர்கள், அரசியல் ஆர்வலர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் ஆகியோர் இந்தக் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டனர். அவர்களில் அறுதிப் பெரும்பான்மையானோர் கூட்டமைப்பின் இந்த முடிவு தமக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் நல்லிணக்கத்தின் பேரால் இவ்வாறு செய்யவேண்டிய அவசியம் எதுவும் கிடையாது எனவும் கருத்து வெளியிட்டனர். அவர்களின் எண்ணங்களின் சாரமாக சிலரது கருத்துக்கள் வருமாறு:

எஸ்.தவபாலசிங்கம் - புளியங்குளம்
தமிழ் மக்களின் அரசயில் தீர்வு மற்றும் உரிமை விடயங்களை கருத்தில் கொண்டே தமிழ் மக்கள் தமிழ்த் தேசிக் கூட்டமைப்புக்கு வாக்களித்தனர். வடமாகாண முதலமைச்சர் ஜனாதிபதி, ஆளுநர் முன்னிலையில் தான் சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டும் என்றோ பதவியேற்க வேண்டும் என்றோ கட்டாய சட்டம் எதுவும் இல்லை. நாங்கள் எங்களது தனித்துவத்தை வெளிப்படுத்தவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தோம். எனவே கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முன்னிலையில் பதவியேற்பதை விடுத்து ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது - என்றார்.

ஜெ.ஜெயரூபன் - நெடுங்கேணி
வல்வெட்டித்துறையில் மாவீரன் பிரபாகரன் என்று முழங்கிய விக்னேஸ்வரன், போர்க்குற்ற வாளியான மஹிந்தவிடம் மண்டியிட்டு பதவியேற்பதை ஒரு போதும் ஏற்க முடியாது. சாதாரணமாக கட்சித் தலைவர் முன்னிலையில் பதவியேற்று மக்கள் வழங்கிய ஆணையுடன் எமது தனித்துவத்தை காட்ட வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் தான் தமிழ் தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக செயற்படுவார்கள் - என்றார்.

சின்னையா சிவரூபன்- யாழ். போதனா வைத்திய சாலை சட்ட வைத்திய அதிகாரி
உலக நாடுகளே போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்­ச முன்னிலையில் வடமாகாண முதலமைச்சர் பதவியேற்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவராகவே மஹிந்த ராஜபக்­ச உள்ளார். அவர் முன்னிலையில் முதலமைச்சர் பதவியேற்பது தமிழ் மக்களுக்கு இழைக்கும் துரோகம்.

து.தமிழ்மாறன் - காரைநகர்
வடக்கு மாகாண முதலமைச்சர் ஜனாதிபதியின் முன்பாகப் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளமை வெட்கம்கெட்ட செயல். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இந்த விடயத்தில் மட்டும் ஏன் அவசரப்பட்டு முடிவு எடுத்தார் என்பது கேள்வியாக உள்ளது. தமிழ் மக்களுக்கு உரிமைகள் கிடைக்கவிடாமல் தடுத்து முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி வரும் அரசின் தலைவர் முன்னிலையில் வடக்கு மாகாண முதல்வர் சத்தியப்பிரமாணம் செய்து தமிழினத்தை மஹிந்தவிடம் அடகு வைக்கும் செயல் - என்றார்.

ஆர்.அரசரத்தினம் - வேலணை
ஜனாதிபதி முன் முதலமைச்சர் பதவி ஏற்பது என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு தமிழ் மக்களுக்குப் பலத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதன்மூலம் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரியனவாக இருக்கும் என்றும் அவர் கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஐந்து கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இவ்வாறு இருக்கையில் சம்பந்தன் மட்டும் தனித்துச் சென்று ஜனாதிபதியைச் சந்திதமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

விஜயகாந்தன் அசோக் - தனியார் நிறுவன ஊழியர் யாழ்ப்பாணம்
ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சர் பதவியேற்பது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயம். காரணம் தாம் மஹிந்த முன்னிலையில் பதவியேற்கமாட்டோம் என்று தெரிவித்த இவர்கள் இந்த வாக்குறுதியையே காப்பாற்ற முடியாது உள்ளனர். அப்படியானால் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள விடயத்தை முழுமையாக எவ்வாறு செயற்படுத்துவர் என்ற கேள்விக்குறி தவிர்க்கமுடியாதது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் மஹிந்தவை ஒருபக்கத்தில் போக்குற்றவாளி என்று குறிப்பிடும் இவர்கள் அப்படியான ஒருவரின் முன்னிலையில் பதவியேற்பது என்பது எந்தவகையிலும் நியாயமற்றது.- என்றார்.

சிவம் - முள்ளியவலை
ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் பதவியேற்பது பொருத்தமற்றது. குறிப்பாக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சாதாரணமாக ஒரு சமாதான நீதிவான் முன்னிலையிலேயே பதவியேற்காலம் என்று குறிப்பிட்ட கூட்டமைப்பினர் தற்போது எடுத்திருக்கும் முடிவு பொறுப்பற்றது. தாம் எடுக்கும் முடிவில் கூட நிலையான கடைப்பாடு அற்றவர்கள் எப்படி தமிழ் மக்களது பிரச்சினையில் ஒரு நிலைக்கொள்கையோடு நடந்துகொள்ளப்போகிறார்கள் - என்றார். 

ச.சஜீவன் - வலி.வடக்கு
கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் போர்க்குற்ற விசாரணைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதில் இலங்கை ஜனாதிபதி தலைமையிலான இராணுவத்தினர் தமிழின அழிப்பில் ஈடுபட்டனர் என்ற கருத்து நிலவுகிறது. அப்படியானால் ஒரு பக்க போர்க்குற்றவாளி மஹிந்தவே. இவர் முன்னிலையில் வடமாகாண முதலமைச்சர் பதவியேற்பது என்பது கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளது.

நாடக கலைஞர் - நீர்வேலி
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பியோ தேர்தல் விஞ்ஞாபனத்தை நம்பியோ அல்ல. சிங்கள பேரினவாதம் வெல்லக்கூடாது என்பதற்காகவே அவர்கள் வாக்களித்தனர். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணர்ந்துகொள்ள வேண்டும். பேரினவாதிகளுக்கு துணை போவதால் எதிர்காலத்தில் தமிழனின் இருப்பு இல்லாமலே போய்விடும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.