பக்கங்கள்

05 அக்டோபர் 2013

முடிவின்றி முடியும் கூட்டமைப்பின் கூட்டங்கள்!

வடமாகாண சபை அமைச்சர்கள் தெரிவு தொடர்பில் இறுதி முடிவெடுப்பதற்கான கூட்டம் இன்று மாலை பம்பலப்பிட்டியில் உள்ள தமிழ் தேசியக் கூட்மைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்றது. எனினும் இந்தக் கூட்டத்தில் இறுதி முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என, கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், புளட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். எனினும் வடமாகாண அமைச்சர்களை தெரிவுசெய்வது தொடர்பான சகல அதிகாரமும் முதலமைச்சராக நியமிக்கப்படவுள்ள, சி.வி. விக்னேஸ்வரனிடம் ஒப்டைக்கப்பட்டுள்ளதாகவும், அவரே இது குறித்து அறிவிப்பார் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். இதேவேளை, தான் பதவி ஏற்றபின் அமைச்சர்களின் விபரம் குறித்து அறவிப்பதாக சி.வி.விக்னேஸ்வரன் இதன்போது கூறியதாக தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் எதிர்வரும் 7ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் வடமாகாண முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். இந்த நிகழ்வில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும் என, சம்பந்தன் இன்று அழைப்பு விடுத்ததாக தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும் கூட்டமைப்பின் அனைத்து தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்பது என்பது சந்தேகத்திற்குரியதொன்றாகவே உள்ளது. காரணம் ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதற்கு கூட்டமைப்புக்குள் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளதோடு, மாகாண அமைச்சர்கள் தெரிவு குறித்தும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மாவை சேனாதிராஜா வெளிநாடு சென்றுள்ளதாக கூட்டமைப்பின் உள்ளக தகவல்கள் கூறுகின்றன. இதேபோல் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) மன்னாரை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய அமைச்சுப் பதவி, யாழ்பாணத்தை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படவுள்ளதாக சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளன. இதனால் அக்கட்சியின் (டெலோ) தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாக, செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் விக்னேஸ்வரனின் சத்தியப்பிரமாண நிகழ்வில் கூட்டமைப்பின் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வது சாத்தியமா எனும் கேள்வி எழுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.