பக்கங்கள்

14 அக்டோபர் 2013

ஒற்றையாட்சி முறையை தமிழ் மக்கள் பல தடவை எதிர்த்துள்ளனர்!

ஒற்றையாட்சி முறைமையால் தமக்கு நன்மை ஏற்படபோவதில்லை என்பதனால் அதனை தமிழ் மக்கள் பல தடவைகள் எதிர்த்துள்ளனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்று (14) மதியம் 12.30 மணயளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், பிரித்தானியர் இலங்கைக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு சென்ற பின்னர் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தமிழ் மக்கள் ஒற்றை ஆட்சி முறைமையை எதிர்த்தே வந்தனர். ஒற்றையாட்சி முறைமையால் தமக்கு நன்மை ஏற்படப்போவதில்லை என்பதனால் அதனை தமிழ் மக்கள் பல தடவைகள் எதிர்த்துள்ளனர். ஆனால் இம்முறை தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒற்றையாட்சி முறைமையை ஏற்று கொள்கின்றோம் என கூறியதன் அடிப்படையில் தமிழர்களின் சரித்திரத்தில் ஒற்றையாட்சி முறைமையை ஏற்று கொண்டதாகி விட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை ஆனாலும் மக்களை இந்த தேர்தலை பகிஸ்கரிக்க கோரவில்லை. வடக்கில் வாழும் மக்கள் இந்த தேர்தலில் பங்கு பற்றி தெளிவான செய்தியை வெளிப்படுத்தி உள்ளனர். அதாவது இலங்கை அரசின் செயற்பாட்டில் தமக்குள்ள வெறுப்பினை வெளிக்காட்டி உள்ளனர். அதேவேளை தமிழர்களின் அபிலாஷைகளை பெற்று கொள்வதற்காகவும் ஒட்டுமொத்த இன விடுதலைக்காகவுமே சரித்திரத்தில் இல்லாதவாறு வாக்களித்து இருந்தனர். ஆனால் தேர்தல் பிரச்சார மேடைகளில் தமிழர்களின் சுயநிர்ணயம் பற்றி பேசிவிட்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒற்றையாட்சி முறைமையை ஏற்று கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுயநிர்ணயம், ஒற்றையாட்சி, அதிகாரபரவலாக்கம் இவை மூன்றும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்றவை இவ்வாறாக இருக்க இரா.சம்பந்தன், சி.வி.விக்னேஸ்வரன், எம்.ஏ.சுமந்திரன் போன்ற சட்டம் தெரிந்தவர்கள் இருந்தும் இந்த மூன்றையும் எவ்வாறு தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்த்தார்கள் அதற்கான காரணம் என்ன? மக்கள் தாம் மனதில் நினைத்து வாக்களித்தது வேறு ஆனால் உத்தியோகபூர்வ ஆணையாக இருப்பது வேறு. தமிழர்கள் ஆரம்பத்தில் இருந்து சுயநிர்ணயத்தை பெற்று கொள்வதற்காக எடுத்து கொண்ட அனைத்து முயற்சிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. 13ம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் பிரிக்கப்படாத இலங்கைக்குள் அதிகார பரவலாக்கத்தை பெற்று கொள்ளவுமே மக்கள் ஆணை வழங்கியதாக தற்போது கூறுகின்றனர். பிரச்சார மேடைகளில் அபிவிருத்திக்கா? சுயநிர்ணயத்திற்கா? உங்கள் வாக்குகள் என்று பேசிவிட்டு தேர்தல் முடிவின் பின்னர் பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் 13ம் திருத்த சட்டத்தின் அடிப்படையிலான அதிகார பகிர்வை பெற்று கொள்ளல் என்கின்றனர். எனவே தேர்தலின் பின்னர் மக்கள் ஒதுங்கி நிற்பது ஆபத்தானது. இந்த மக்களின் பங்களிப்பு தொடர்ந்து இருக்க வேண்டும். அத்துடன் மக்கள் மயப்படுத்த எமது போராட்டம் தொடரும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.