பக்கங்கள்

07 அக்டோபர் 2013

பொதுநலவாய மாநாட்டில் கனடிய பிரதமர் கலந்துகொள்ள மாட்டார்!

மனித உரிமை விவகாரத்தில் முன்னேற்றம் இல்லை: மாநாட்டு புறக்கணிப்பை உறுதி செய்தது கனடா!இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்க எடுத்த தீர்மானத்திற்கான காரணத்தை கனடா விளக்கியுள்ளது. இன்றைய தினம் (07) அறிக்கை ஒன்றை விடுத்துள்ள கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளுக்கு இலங்கை மதிப்பளிக்கவில்லை என கனேடிய பிரதமர் விடுத்துள்ள விளக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளைப் பேண இலங்கை அரசாங்கம் தவறிவிட்டதாக ஸ்டீவன் ஹார்பர் சுட்டிக்காட்டியுள்ளார். அதனால் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மேம்படும் என நம்பியபோது துரதிஸ்டவசமாக அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை எனவும் மனித உரிமை விடயத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனவும் கனேடிய பிரதமர் குறிப்பிட்டார். இறுதிக் கட்ட யுத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்குற்றம் போன்றவற்றிற்கு இதுவரை தண்டனை விதிக்கப்படவில்லை எனவும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் கூறினார். எனினும் இலங்கை தொடர்பில் தொடர்ந்தும் கனடா உன்னிப்பாக அவதானிக்கும் என கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் தெரிவித்துள்ளார். பிரதம நீதியரசர் பதவி விலக்கப்பட்ட விதம், சிறுபான்மை மக்கள், எதிர்க்கட்சியினர், ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் மாற்றுச் சிந்தனையாளர்கள் மீதான அடக்குமுறைகள் கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் கனேடிய வெளிவிவகார அமைச்சரின் பாராளுமன்ற விவகாரச் செயலாளர் தீபக் ஒபராய் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டு அமர்வுகளில் கனடாவை பிரதிநிதித்துவம் செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.