பக்கங்கள்

12 அக்டோபர் 2013

விக்னேஸ்வரன் ஆயுதப்போராட்டத்தை மலினப்படுத்துகிறார்!

மக்களால் தெரிவு செய்யப்பட்ட வட மாகாணசபை உரிய முறையில் பயணிக்கிறதா என்பதனை தாம் கண்காணிக்க உள்ளதாக வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயக அணியினர் தெரிவித்துள்ளனர். இன்றயதினம் (12.10.13) யாழ்ப்பாணத்தில் நடத்தும் ஊடக மகாநாட்டில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் ஈபீஆர் எல் எவ்பின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் வாக்கு வேட்டைக்காக விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை மாவீரன் என்று கூறிய முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் இப்போது ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியும் மலினப்படுத்தியும் அறிக்கைகளை விடுத்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம் முன்நாள் ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்கங்களை மட்டும் அவர் கொச்சைப்படுத்துகிறார் என பலரும் மௌனித்திருக்கின்றனர். எனினும் அவரது அறிக்கைகளை கூர்ந்து கவனிப்பவர்கள் விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தையும் அவர் கொச்சைப்படுத்துவது நன்கு புலப்படும் என ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட பலரும் தெரிவித்துள்ளனர். கூட்டமைப்பின் இலக்கணங்களுக்கு புறம்பாக எதேட்சாதிகாரமாக செயற்படும் முதலமைச்சர் தனது உறவினர்களையும் வடக்கின் நிலமைகளை துளியளவும் உணரமுடியாத கொழும்பில் வசித்த தனக்கு வெண்டியவர்களுக்குமே இணைச் செயலாளர்கள் பதவியை வழங்க உள்ள நிலையில் மற்றவர்கள் மீது பழியை சுமத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை அமைச்சுப் பதவிகளுக்காக அடிபடுகிறோம் என்ற கோதாவில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளையும் அதன் தலைவர்களையும் முதலமைச்சர் மலினப்படுத்தி வருவதாகவும் கூறிய சுரேஸ் தமது உறுப்பினர்கள் முள்ளிவாய்காகலில் தமது சத்தியப்பிரமான நிகழ்வை நடத்துவார்கள் எனவும் தெரிவித்தார். இன்றய ஊடக சந்திப்பில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிறேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.