பக்கங்கள்

07 அக்டோபர் 2013

விக்னேஸ்வரன் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!

இலங்கை வட மாகாண முதல்வராக , ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, சி.வி.விக்னேஸ்வரன் இன்று திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். கொழும்பில், அலரி மாளிகையில் நடந்த வைபவத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஜனாதிபதி முன் பதவிப்பிரமாணம் செய்வது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவும் சூழலில் இந்தப் பதவிப் பிரமாண வைபவம் நடந்திருக்கிறது. இதற்கிடையே, வட மாகாணத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப்போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அனந்தி சசிதரன் தான் விக்னேஸ்வரன் முன்னர் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளப்போவதில்லை என்று கூறியிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. சல்மான் குர்ஷித் இலங்கையில் இதனிடையே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் இரண்டு நாள் விஜயமாக இன்று இலங்கை வந்தடைந்திருக்கிறார். அவர் இலங்கை அரசுடன், இனப்பிரச்சினையில் கண்டுள்ள முன்னேற்றம் குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சம்பூரில் இந்திய உதவியுடன் தொடங்கப்படும் மின்சார உற்பத்தித் திட்டம் குறித்த சில ஒப்பந்தங்களும் இந்த விஜயத்தின் போது கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது. சல்மான் குர்ஷீத் செவ்வாய்க்கிழமையன்று யாழ்ப்பாணம் விஜயம் செய்வார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.