பக்கங்கள்

16 அக்டோபர் 2013

ராமச்சந்திர ஆதித்தனார் மறைந்தார் வைகோ இரங்கல்!

தமிழ் மான உணர்வுச் சுடர் அணைந்தது என்று மாலைமுரசு அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் தலைமகன், மாலை முரசு ஏட்டின் அதிபர் ராமஇச்சந்திர ஆதித்தனார் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாய் தாக்கியது. அதிர்ச்சியால் மனம் கலங்குகிறேன். தன் தந்தையாரைப் போலவே தமிழ் இனமான உணர்வு கொண்டவராக தமிழ் ஈழ விடுதலை உணர்வாளராகவே வாழ்ந்தார். தமிழர்கள் உரிமைக்காக, தமிழ் ஈழ விடியலுக்காக தனது மாலைமுரசு ஏட்டையும், தான் நடத்திய கதிரவன் பத்திரிகையையும் அர்ப்பணித்தார். பல ஆண்டுகளாக அவரது பரிவான நட்பைப் பெற்றிருந்தேன். நான் சந்திக்கும்போதெல்லாம் தமிழர் நலன், ஈழ விடியல் குறித்தே பேசுவார். மெர்க்கெண்டைல் வங்கியை மீட்கின்ற பணியில் அவர் ஈடுபட்டபோது, அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களிடமும், நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா அவர்களிடமும் நிலைமையை எடுத்துக் கூறி, அவரது கோரிக்கைகளை நான் நிறைவேற்றிக் கொடுத்ததற்காக எனது இல்லம் தேடி வந்து நன்றி கூறிய பண்பாளர் ஆவார். 2008 ஆம் ஆண்டு கடைசியிலும், 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் கொடுந்துயர் வரையிலும் சிங்கள அரசு நடத்திய தமிழ் இனப் படுகொலையை நாள்தோறும் ஆதாரங்களுடன் விரிவாக மாலைமுரசு ஏட்டில் வெளியிட்டதனாலும், முத்துக்குமார் உள்ளிட்ட வீரத் தியாகிகளின் உயிர்கொடையை தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செய்திகளாக தனது மாலைமுரசு ஏட்டில் தந்ததனாலும், மத்திய அரசு பல வகையிலும் நெருக்கடி கொடுத்து மிரட்டியபோதும், அதற்கு சற்றும் அஞ்சாது, தலைவணங்காது நீதிக்காகவும், தமிழர் உரிமைக்காகவும் மாலைமுரசு பத்திரிகையை காண்டீபம் என ஏந்திய வீரமிக்க பெருந்தகையாளர்தான் இராமச்சந்திர ஆதித்தனார் அவர்கள் ஆவார்கள். துன்பப்படுகின்றவர்வகளுக்கு உதவுகின்ற இரக்க சுபாவம் மிக்கவர். அன்னாரது இளவலான சிவந்தி ஆதித்தனார் அவர்கள் மறைந்த ஆறு மாத காலத்திற்குள் இராமச்சந்திர ஆதித்தனாரும் மறைந்த துக்கம் பத்திரிகை உலகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகிவிட்டது. அவரது மறைவால் துயரத்தில் துடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், மாலைமுரசு ஏட்டின் செய்தியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.