பக்கங்கள்

09 ஏப்ரல் 2013

போர்க்குற்ற ஆதாரங்களின் பின்னணியில் அதிகாரப் போட்டி? – ஆங்கில ஊடகம் சந்தேகம்

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை நிரூபிக்கும் ஒளிப்படங்கள் வெளியான விடயத்தில்,இலங்கைப் படைத் தளபதிகளுக்குள் இருக்கும் அதிகாரப் போட்டியே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், அனைத்துலக ஊடகங்களுக்கு கிடைத்துள்ள பெரும்பாலான ஒளிப்படங்கள், மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவின் கீழ் செயற்பட்ட பிடைப்பிரிவுகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகளை வெளிப்படுத்தியவையாகும். இது எதிர்காலத்தில் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண சிறிலங்காவின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்படுவதை தடுக்கும் சதித் திட்டமாக இருக்கலாம் என்று சிறிலங்கா இராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளன. சனல் 4, சிறிலங்காவில் ஜனநாயத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு, உலகத் தமிழர் பேரவை என்பனவற்றினால் வெளியிடப்பட்ட படங்களில் இடம்பெற்ற சம்பவங்களுடன் 53வது டிவிசன் மற்றும் 8வது அதிரடிப்படைபிரிவே தொடர்புபட்டிருந்தது. 2009 ஏப்ரல் 06ஆம் திகதி புதுக்குடியிருப்பில் சரணடைந்த விடுதலைப் புலிகள் படுகொலை செய்யப்பட்டது, 2009 மே 17ஆம் திகதி நந்திக்கடல் பகுதியில் விடுதலைப் புலிகள் படுகொலை செய்யப்பட்டது, மற்றும் 2009 மே 19ஆம் திகதி பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது ஆகியன இந்தக் காணொலிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர வெளியிடப்பட்ட மற்றொரு காணொலி மற்றும்ஒளிப்படங்கள் 2009 மே 17ஆம் திகதி பதிவு செய்யப்பட்ட, விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் ரமேஸ் சிறிலங்கா இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் காட்சியைக் கொண்டது. கேணல் ரமேசை சுற்றி நிற்கும் சிறிலங்கா படையினர் கொமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், அப்போது சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவுக்கு கேணல் ரால்ப் நுகேரா தலைமை தாங்கியிருந்தார் என்றும் காணொலி மற்றும் ஒளிப்பட ஆதாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. வன்னிப் போர் நடவடிக்கையின் போது, கேணல் ரமேஸ் படுகொலை செய்யப்பட்டது மட்டுமே கொமாண்டா படைப்பிரிவினரால் நிகழ்த்தப்பட்ட ஒரே போர்க்குற்றம் அல்ல. முதலில் பிரிகேடியர் சாஜி கல்லகேயும், பின்னர் பிரிகேடியர் சவீந்திர சில்வாவும் இந்தப் படைப்பிரிவுகளுக்குத் தலைமை தாங்கியிருந்தனர். சவேந்திர சில்வா தலைமை தாங்கிய 58வது டிவிசனும் அப்போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டது. இருந்தபோதிலும் அந்தப் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. எனவே மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவை நெருக்கடிக்குள் தள்ளும் நோக்கிலேயே இந்த காணொலி மற்றும் ஒளிப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது என்று சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். வன்னிப் போரின் போது, ஊடகவியலாளர்கள் மாத்திரமின்றி, இராணுவத்தினர் கூட குறிப்பிட்ட பகுதிகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. எனினும் மூத்த அதிகாரிகளுக்கு மட்டும் சுதந்திரமாக எங்கும் செல்லும் அனுமதி இருந்தது. ஒரு கட்டளை அதிகாரி தனது வாகனத்தில் ரூபவாகினி ஒளிப்படப்பிடிப்பாளர் ஒருவரை தான் செல்லும் போர்க்களப் பகுதி எங்கும் அழைத்துச் சென்றிருந்தார். இந்த ஒளிப்படப்பிடிப்பாளரிடம் பல ஒளிப்பதிவுக் கருவிகள் இருந்தன. போர்முனைக் காட்சிகளை படம்பிடிக்க ரூபவாகினி முத்திரை பதிக்கப்பட்ட ஒளிப்படக்கருவி தவிர்ந்த வேறு கருவிகளை அவர் ஏன் பயன்படுத்தினார் என்ற சந்தேகம் உள்ளது. மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண நன்று அறியப்பட்ட மற்றும் அமைதியான ஒரு அதிகாரி. அவர் மீது சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு நம்பிக்கை உள்ளது. அவர் ஊடகங்களுடன் அவ்வளவு நெருக்கமானவர் அல்ல. எனவே அடுத்த இராணுவத் தளபதி பதவிக்கு அவரே கோத்தபாய ராஜபக்சவின் தெரிவாக இருக்கும் என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளதாகவும் ஆங்கில ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.