பக்கங்கள்

15 ஏப்ரல் 2013

மண்டைதீவில் இளம் குடும்பஸ்தர் மீது கடற்படை தாக்குதல்!

யாழ். மண்டைதீவு பகுதியில் கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் படைமுகாமில் வைத்து மோசமாக தாக்கப்பட்டுள்ளார். எனினும் ரோந்து சென்ற படையினரை தாக்கியதாக பின்னர் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ள 29 வயதுடைய ஜெ.காண்டீபன் எனும் குறித்த பொதுமகன் தற்போது படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது: கடந்த சனிக்கிழமை இரவு குறித்த பொதுமகனது வீட்டிற்குள்ளே அடாத்தாக புகுந்த கடற்படை சிப்பாய் ஒருவர் வீட்டில் தனித்திருந்த பெண்களை பாலியல் ரீதியாக துனபுறுத்தியுள்ளார். அவ்வேளை தொழில் முடிந்து வீடு திரும்பியிருந்த ஜெ.காண்டீபன் எனப்படும் குறித்த குடும்ப தலைவர் அச்சிப்பாயை அடித்து விரட்டியுள்ளார். தப்பியோடிய குறித்த சிப்பாய் பின்னர் தனது சகபாடிகளுடன் சென்று காண்டீபனை முகாமிற்கு கடத்தி சென்று தாக்குதல் நடத்தியுள்ளார். பின்னர் ரோந்து சென்ற கடற்படையினரை தாக்கியதாக கூறி அவரை மண்டைதீவு பொலிஸாரிடம் கையளித்துமுள்ளனர். இந்நிலையில் காயங்களுக்கு சிகிச்சை பெறவென யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள காண்டீபன் பத்திரிகையாளர்களிடம் இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார். தீவகப் பகுதிகளிலும் அதே போன்று குடாக்கடலை அண்டிய பகுதிகளிலும் இரவு வேளைகளில் தொழிலுக்காக
 ஆண்கள் கடலுக்கு சென்றுவிடும் நிலையில் தனித்திருக்கும் பெண்களை இலக்கு வைத்து இவ்வாறான பாலியல் துஸ்பிரயோகங்கள் கடற்படையினால் அரங்கேற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.