பக்கங்கள்

05 ஏப்ரல் 2013

கூட்டமைப்பின் தீவக அமைப்பாளர் கடத்தப்பட்டு சித்திரவதை!

சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரான அங்கயன் மற்றும் அவரது தந்தையார் இராமநாதன் ஆகிய இருவரும் தம்மை கடத்திச்சென்று சித்திரவதைகளை மேற்கொண்டதாக கூட்டமைப்பின் தீவக அமைப்பாளரான நிசாந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். இக்கடத்தல் மற்றும் தாக்குதல் தொடர்பாக அவர் வெள்ளவத்தை மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த புதன்கிழமை வழமை போன்று தான் கொழும்பு சென்றிருந்த நிலையில் வெள்ளவத்தைப்பகுதியில் வைத்து பிற்பகல் 2.30 மணியளவில் தன்னை கைத்துப்பாக்கி முனையில் கடத்திச்சென்ற அங்கயனின் தந்தையாரான இராமநாதன் தமது சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் கொழும்பு அலுவலகத்தில் தன்னை மறைத்து வைத்திருந்ததாக தெரிவித்தார்.அத்துடன் சுமார் ஜந்து மணிநேரமாக தனித்து வைத்து சித்திரவதைகளையும் அவர்கள் மேற்கொண்டதாக கூட்டமைப்பின் தீவக அமைப்பாளரான நிசாந்தன் மேலும் குற்றம் சாட்டினார்.இன்று யாழ்.ஊடக அமையத்தினில் அவர் பத்திரிகையாளர் மாநாடொன்றை கூட்டியிருந்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் அண்மையில் நல்லூர் கோவில் வீதியினில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட மகளிர் அமைப்பாளரொருவருக்கு சொந்தமான விபச்சார விடுதி கைப்பற்றப்பட்டிருந்தது.இதன் பின்னணியினில் தாமே இருந்ததாக குற்றஞ்சாட்டியே தம்மை கடத்தி; தாக்குதல்களையும் சித்திரவதைகளையும் மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக தாக்குதல்கள் இடம்பெற்ற வேளை அங்கு அங்கஜனும் பிரசன்னமாகியிருந்ததாகவும் தமக்கும் அரசுக்கும் எதிராக சேறு பூசும் வகையில் வெளிநாட்டு இணையங்கள் சில செயற்படுவதாக குற்றஞ்சாட்டியே தாக்குதல்களை நடத்தியதாக தெரிவித்த நிசாந்தன் அத்தகைய ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் தொடர்பான தகவல்களை தருமாறு நிர்ப்பந்தித்ததாகவும் கூறினார்.துப்பாக்கி முனையில் தன்னை தடுத்து வைத்து வாக்குமூலங்கள் பெற்று அவற்றை வீடியோ பதிவு செய்ததாகவும்; வெள்ளை தாள்களில் மிரட்டி ஓப்பங்கள் பெறப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் மாநகரசபை உறுப்பினர் விந்தன் ஆகியோரும் இவ்வாறு இலங்கை அரசுக்கு எதிராக பிரச்சாரங்கள் செய்வதாக குற்றஞ்சாட்டி தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதனிடையே கடந்த காலங்களினில் இடம்பெற்ற ஆட்கடத்தல்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கலாமென சந்தேகம் வெளியிட்ட அவர் தான் இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றின் உதவியை நாடவுள்ளதாகவும் தெரிவித்தார். ஈபிடிபி சார்பில் போட்டியிட்டு யாழ்மாநகரசபை அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்ட நிசாந்தன் பின்னா அங்கு முரண்பட்டு வெளியேறியிருந்தார்.பின்னர் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரான அங்கயன் தலைமையில் இணைந்து பணியாற்றியிருந்தார். பின்னர் அங்கும் முரண்பட்டு தற்போது கூட்டமைப்பில் இணைந்து கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.