பக்கங்கள்

29 ஏப்ரல் 2013

பாதுகாப்பு வலயத்தினுள் உட்புக முனைந்த மக்கள்!

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் மீளக்குடியமர அனுமதிக்கக்கோரி இன்று இடம்பெயர்ந்த மக்கள் அடாவடியாக உள்ளே நுழையும் போராட்டமொன்றினை தடாலடியாக நடத்தியுள்ளனர்.முன்னதாக இன்று காலை தெல்லிப்பழை பிரதேச செயலகம் முன்பதாக அமைதி வழியினில் மக்கள் எதிர்ப்புப்போராட்டமொன்றினில் குதித்திருந்தனர்.காலை 11 மணி தாண்டியும் குடாநாட்டின் பலபகுதிகளினிலிருந்தும் இடம்பெயர்ந்த மக்கள் போராட்டத்திற்கென அணிதிரண்டு வந்தவண்ணமிருந்தனர். சுமார் எண்ணூறு முதல் ஆயிரம் வரையான இடம்பெயர்ந்த மக்கள் இப்போராட்டத்தில் குதித்திருந்தனர்.திடீரென அமைதி வழி போராட்டத்தில் குதித்திருந்த மக்கள் காங்கேசன்துறை வீதியூடாக உயர்பாதுகாப்பு வலயமென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளினுள் உட்பிரவேசிக்க முற்பட்டனர்.இதையடுத்து அவர்கள் அனைவரும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் முன்பதாக வழிமறிக்கப்பட்டனர்.பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டு வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டு மேற்கொண்டு அவர்களை செல்லவிடாது தடுக்கப்பட்டனர்.அதையடுத்து சீற்றமடைந்த மக்கள் அரசிற்கு எதிராக கோசங்களை எழுப்பினர்.திட்டித்தீர்த்தனர்.மண்ணை அள்ளி வீசி பெண்கள் சாபமிட்டனர்.அவசர அவசரமாக பெருமளவிலான கலகம் அடக்கும் பொலிஸார் அழைத்து வரப்பட்டு குவிக்கப்பட்டனர். கட்சி பேதமின்றி கூட்டமைப்பினர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஜனநாயக மக்கள் முன்னணியினர் என பலதரப்பினரும் சிவில் அமைப்புக்களை சார்ந்தவர்களும் மதப்பெரியார்களும் இப்போராட்டத்திற்கான ஆதரவை வழங்கியிருந்தனர்.போராட்டகாரர்கள் பின்னர் மீண்டும் தெல்லிப்பழை பிரதேச செயலகம் முன்பதாக குவிந்து பிரதான வாயிலை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தினில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் வலி.வடக்கு மற்றும் வலி. கிழக்கு பகுதிகளில் பொது மக்களுக்குச் சொந்தமான 6 ஆயிரத்து 381 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக தெல்லிப்பழை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்று காலை8 மணி முதல் மறியல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்தப்போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா ,எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொது செயலாளர் வீ.ஆனந்த சங்கரி, ஜனநாயக மக்கள் முன்னணியைச் சேர்ந்த பாஸ்கரா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இவர்களுடன்; பிரதேச சபைத் தலைவர்கள் உறுப்பினர்கள்இ பொதுமக்கள் எனப் பெரும்பாலானவர்கள் திரண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இதேவேளை இந்தப் போராட்டத்துக்கு மக்களை ஏற்றியிறக்கும் பணிகளில் எந்தவொரு மினி பஸ்ஸும் ஈடுபடக்கூடாது என்று 'இராணுவப் புலனாய்வாளர்கள்' என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட சிலர மினிபஸ் உரிமையாளர்களின் வீடுகளுக்குச் சென்று எச்சரித்துள்ளனர் என்று நேற்றுத்தெரிவிக்கப்பட்டது. இன்றும் தொண்டமனாறு உள்ளிட்ட பகுதிகளினில் போராட்டத்தினில் கலந்து கொள்ள வந்த மக்கள் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.