பக்கங்கள்

14 ஏப்ரல் 2013

அவுஸ்திரேலியாவில் 7ஆவது நாளும் தொடர்கிறது உண்ணாவிரதம்!

newsஅவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் தமிழ் அகதிகளால் கடந்த 8ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் 7ஆவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது. விடுதலை செய் அல்லது கருணைக்கொலை செய் என்ற கோரிக்கையுடன் தொடரும் இந்தப் போராட்டத்தில் 25 தமிழர்கள் உட்பட 27 அகதிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். மழை, பனி, குளிர் என நெருக்கடியான மெல்பேர்ண் காலநிலையில், தடுப்பு முகாமின் முற்றத்தில் படுத்திருந்தவாறு தமது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகின்றார்கள். இதுவரை ஐந்து பேர் இயலாதநிலையில் மயக்கமடைந்த பின்னர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லபட்டிருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட உடனடியான சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் திரும்பிவந்து இணைந்து உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு ஆதரவாக தடுப்பு முகாமிற்கு வெளியில் கடந்த மூன்று நாட்களாக மணிநேர கவனயீர்ப்பு போராட்டம் வேற்று சமூகமக்களின் ஆதரவுடன் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. அகதிகள் என சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களை வெளிப்படையற்ற விசாரணையின்றி தடுத்துவைப்பது அடிப்படை மனிதாபிமான விழுமியங்களுக்கு எதிரானது. சிறுவர்கள் பெண்கள் இளைஞர்கள் என எந்த வேறுபாடுமின்றி கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாழ்க்கை வாழும் இவர்களின் விடுதலை தொடர்பாக எந்தவித உறுதியான நடவடிக்கைகளையும் அவுஸ்திரேலிய அரசு எடுக்கவி்ல்லை. தற்போதைய நடைமுறையின்படி அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் பாதுகாப்பு பரிசோதனை என்ற மதிப்பீட்டை அந்த நாட்டின் புலனாய்வு அமைப்பான ASIO மேற்கொண்டபின்னர் அகதிகளுக்கான விசா வழங்கப்பட்டு வருகின்றது. பாதுகாப்பு மதிப்பீட்டில் ஒருவர் நிராகரிப்பட்டால் அவர் காலவரையறையற்ற முறையில் தடுப்பு முகாமில் அடைக்கப்படுவார். அவர்களுக்கான மீள் விசாரணையோ மேல்முறையீடோ அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நடைமுறையின் காரணமாக ஈழத்தமிழ் மக்களே பெரும்பாலும் பாதிப்பை எதிர்நோக்கியிருக்கிறார்கள். இவ்வாறு பாதுகாப்பு மதிப்பீட்டில் நிராகரிக்கப்பட்ட நிலையில் பெண்கள் குழந்தைகள், சிறுவர்கள் உட்பட சுமார் 55 ஈழத்தமிழர்கள் காலவரையறையற்ற முறையில் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்கள். மூன்றாண்டுகளுக்கும் மேலாக எதிர்காலம் பற்றிய எதுவித நம்பிக்கையுமின்றி, சாகும்வரை தடுப்புக்காவலிலேயே வாழ்ந்தழியும் நிலைமீது அதிருப்தி அடைந்த நிலையில் மெல்பேர்ண் முகாமில் தங்கியுள்ள 28 பேர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தனர். அவர்களில் ஒரு ஈரானியர் சுகயீ்னம் காரணமாக தனது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார். ஏனையவர்களில் சிலர் சிறுநீரகத்துடன் இரத்தம் கசியும்நிலையிலும் உறுதியோடு தமது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.