பக்கங்கள்

01 ஏப்ரல் 2013

கிளிநொச்சி தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை கோருகிறார் சம்பந்தன்!

images[4]கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் மீது அரசின் அனுமதியுடன் இராணுவம், பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த புலனாய்வாளர்களும், அரசின் அடிவருடிகளும் நடத்திய அராஜகம் மூலம் வடக்கில் காட்டாட்சி எந்தளவிற்கு உச்சமடைந்துள்ளது என்பதை சர்வதேச சமூகம் விளங்கிக் கொள்ளவேண்டும். எனவே, சர்வதேசம் இந்தச் சம்பவங்களுக்கு கண்டனங்களை மட்டும் வெளியிடாது இலங்கை அரசு மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். வடக்கு மாகாணசபைத் தேர்தல் செப்ரெம்பரில் நடைபெறும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், தேர்தல் தொடர்பில் கிளிநொச்சியில் கூட்டமைப்பு நடத்திய முதலாவது மக்கள் சந்திப்புக் கூட்டத்தை குழப்பியடிக்கும் நோக்கில் அரச மேலிடத்தின் அனுமதியுடன் இந்தத் தாக்குதல் அரங்கேற்றப்பட்டுள்ளது என்றும் சம்பந்தன் குற்றம்சாட்டினார். கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றுமுன்தினம் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தவேளை அங்கு அத்துமீறி நுழைந்தவர்கள் சரமாரியாகக் கற்களை வீசி மக்கள் மீதும், அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி பெரும் அராஜகத்தைப் புரிந்துள்ளனர். இதில் 20 இற்கு மேற்பட்ட மக்கள் காயமடைந் துள்ளனர். இந்தச் சம்பவத்திற்கு தமது கண்டனத்தைத் தெரிவித்து கருத்து வெளியிடும்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் நேற்று “உதயனி’டம் மேலும் தெரிவித்தவை வருமாறு: வடக்கு மாகாணம் 24 மணித்தியாலங்களும் அரச படைகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது. எனவே, அங்கு எந்தவொரு நிகழ்வும் அரசின் அனுமதி இல்லாமல் அல்லது இராணுவம், பொலிஸ் ஆகியோரின் பாதுகாப்பு இல்லாமல் நடைபெறாது. இந்நிலையில், கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தின் மீது அராஜகம் புரியப்பட்டுள்ளது. இதில் எமது மக்கள் 20 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மயிரிழையில் தப்பியுள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் நடந்த இடத்தில் நான் இருக்கவில்லை. எனினும், அந்த இடத்தில் நின்ற எமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனக்கு வழங்கிய தகவல்கள் மற்றும் தொலைக்காட்சிகள், பத்திரிகைகளில் நான் பார்த்த காட்சிகளினூடாக மக்கள் மீதும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் மீதும் கல்லெறித் தாக்குதல் நடத்தியவர்கள் தலைமயிரை கட்டையாக வெட்டி அரைக் காற்சட்டையுடனும், நீளக் காற்சட்டையுடனும் நின்றுள்ளார்கள். இவர்களைப் பார்க்கும் போது சாதாரண மக்கள் போலத் தெரியவில்லை. அதாவது இராணுவம், பொலிஸ் பிரிவைச் சேர்ந்த புலனாய்வாளர்களின் தோற்றத்துடன் உள்ளார்கள். எனவே, குறித்த தாக்குதலில் அரசின் அனுமதியுடன் இராணுவம், பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த புலனாய்வாளர்களும், அரசின் அடிவருடிகளும் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது நிரூபணமாகியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தாம் நாட்டை நேசிப்பவர்கள் என்பதைக் காட்டுவதற்காக நாட்டின் தேசியக் கொடியான சிங்கக்கொடியை கைகளில் ஏந்தி வந்துள்ளனர். இவர்கள் கேட்டுக் கேள்வி இல்லாமல் அமைதியாக நடைபெற்றுக்கொண்டிருந்த கூட்டமைப்பின் கூட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்து அலுவலகம் மீதும், மக்கள் மீதும் கல்லெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர். அத்துடன் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் மீதும் கல்லெறித் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். நாட்டை நேசிப்பவர்கள் என்று தேசியக்கொடியைக் காட்டி தம்மை அடையாளம் காட்ட முனைந்தவர்கள் இவ்வாறான அடாவடியில் ஈடுபட்டது சரியா? இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தமக்குத் தொடர்பில்லை எனக் கூறும் இராணுவத்தினரும், பொலிஸாரும் தாக்குதல் நடைபெறும் போது ஏன் கைகட்டி அமைதி காத்தார்கள்? தேசியக் கொடிக்கு மரியாதை கொடுக்காமல் நடந்துகொண்ட வர்களை ஏன் கைதுசெய்யவில்லை? தாக்குதலில் ஈடுபட்டவேளை பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இராணுவப் புலனாய்வாளரை பொலிஸார் ஏன் கைது செய்யாமல் அந்த இடத்திலேயே விடுவித்தார்கள்? எனவே, அரசின் மேலிடத்தில் இருந்து இந்த அராஜக நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது நிரூ பணமாகின்றது. அதேவேளை, வடக்கில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து அங்கு அரச படைகளின் கீழ் காட்டாட்சி நடக்கின்றது என்பது புலனாகின்றது. இதேவேளை, வடக்கில் கடந்த உள்ளூராட்சி தேர்தலின்போது அளவெட்டியில் நடைபெற்ற கூட்டமைப்பின் முதலாவது கூட்டம் மீது இராணுவமே சீருடைகளுடன் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர். அதேமாதிரி வடக்கு மாகாணசபைத் தேர்தல் செப்ரெம்பரில் நடைபெறும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், கிளிநொச்சியில் முதலாவதாக நடந்த கூட்டமைப்பின் மக்கள் சந்திப்புக் கூட்டத்தையும் குழப்பியடிக்கும் நோக்கில் அரசின் அனுமதியுடன் இராணுவ, பொலிஸ் புலனாய்வா ளர்கள், அரசின் அடிவருடிகள் அராஜகம் புரிந்துள்ளனர்.இதிலிருந்து வடக்கு மாகாண சபைத் தேர்தல் அரச தரப்பின் வன்முறைகளுக்கு மத்தியில் நடைபெற சந்தர்ப்பம் உள்ளதை அமெரிக்கா, இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை அரசின் அடாவடிகளைக் கண்டித்து அதற்கு எதிராக ஜெனிவாவில் அமெரிக்கா தனது இரண்டாவது தீர்மானத்தைக் கொண்டுவந்த சில தினங்களிலே கிளிநொச்சியில் தனது அராஜகத்தைக் காட்டியுள்ளது அரச தரப்பு. இதனூடாக ஜனநாயக உரிமைகள்,மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. இராணுவ அடக்குமுறையின் உச்சக்கட்டமாக கிளிநொச்சியில் பொதுமக்கள் மீதும், கூட்டமைப்பின் அலுவலகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரசின் அனுமதியுடன் இராணுவம், பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த புலனாய்வாளர்களும், அரசின் அடிவருடிகளும் நடத்திய அராஜகம் மூலம் வடக்கில் காட்டாட்சி எந்தளவிற்கு உச்சமடைந்துள்ளது என்பதை சர்வதேச சமூகம் விளங்கிக்கொள்ளவேண்டும். எனவே, சர்வதேசம் இந்தச் சம்பவங்களுக்கு கண்டனங்களை மட்டும் வெளியிடாது இலங்கை அரசு மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்தார் சம்பந்தன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.