பக்கங்கள்

26 ஏப்ரல் 2013

ஐந்தாயிரம் ஏக்கர் காணியை கையகப்படுத்த படைகள் முயற்சி!

newsபூநகரிப் பிரதேசத்தில் தாம் வாழும் வளமான பகுதிகளில் உள்ள 5 ஆயிரம் ஏக்கர் வரையிலான காணியை இராணுவத்தினர் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அரச அதிகாரிகள் துணைபோகின்றனர். இவ்வாறு பூநகரிப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பூநகரிப் பிரதேச மக்கள் அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; 1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இருந்து பூநகரிப் பிரதேசம் ஒரு சூனிய பிரதேசமாகவே காணப்பட்டது. இராணுவ நடவடிக்கைகள் காரணமாக தாம் இடம்பெயர்ந்து செல்லொணாத் துயரங்களை அனுபவித்து தற்போது மீளக்குடியேறியுள்ளோம். அடிப்படை வசதிகள் இல்லை, குடிதண்ணீர் வசதி இல்லை, போக்குவரத்து, சுகாதார, கல்வி மேம்பாடுகள் இல்லை, தொழில் முயற்சிகளுக்கான வளவாய்ப்புக்களை முழுமையாகப் பயன்படுத்த முடியாதுள்ளது. வளமான பகுதிகள் எனக் கருதப்படும் இடங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட பிரதான தொழில்கள் பாதிக்கப்படுகின்றன. முக்கொம்பனில் உள்ள 130 ஏக்கர் தென்னம் தோட்டக் காணி இராணுவத்தினரின் பிடியிலேயே உள்ளது. முழங்காவிலில் ஒரே படைப் பிரிவினருக்கு 3000, 700,50 ஏக்கர் என வெவ்வேறு இடங்களில் காணி கோரப்பட்டுள்ளது. வறண்ட பிரதேசமான பூநகரியில் செழிப்பாக இருக்கும் இடங்களை இராணுவத்தினருக்கு தாரை வார்க்க சிலர் முயற்சிக்கின்றனர். இவ்வாறான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு, மக்களது நலன் கருதி, எதிர்கால அபிவிருத்திகளுக்காக அந்த நிலங்கள் குடிமக்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட தமிழ் கிராமம் மீண்டும் பொன்விளையும் பூமியாக மாற்றப்படுதல் வேண்டும். இதற்கு சமூகப் பொறுப்புடைய அரச அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் முன்வரவேண்டும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.சே. பிரிவு 19 வாழும் குடும்பங்கள் 6,350
மொத்த சனத்தொகை 22,543
காணிகள் அற்று 180 குடும்பம் வரை
இராணுவ முகாம்கள் - 31 வரை
படையினர் எண்ணிக்கை - 4,500 பேர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.