பக்கங்கள்

28 ஏப்ரல் 2013

கேப்பாபுலவிலும் 526 ஏக்கர் காணி பறிப்பு!

முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில், கேப்பாபுலவு கிராமத்தில் 526 ஏக்கர் காணி படையினருக்குச் சுவீகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தல்கள் அந்தப் பிரதேசத்தில் ஒட்டப்பட்டுள்ளன. சொந்த ஊரில் அகதி ஏற்கனவே கோம்பாவில் பகுதியில் உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக 250 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சொந்த இடத்தி லேயே அகதி முகாம் அமைத்து குடியமர்த் தப்பட்டுள்ளன. இதில் 136 குடும்பங்கள் அடிப்படை வசதிகள் எவையும் இன்றி நிர்க்கதி நிலையில் உள்ளன. இந்த மக்கள் தமது சொந்தக் காணிகளை படையினரி டம் இருந்து விடுவித்து அங்கு தம்மை மீளக்குடியேற அனுமதிக்குமாறு கோரியுள்ளனர். அடிப்படை வசதிகள் இல்லை, உட்கட்டுமான வசதிகள் இல்லை, சமுர்த்தி நிவாரணம் இல்லை, தொண்டு நிறுவனங்களது உதவிகளோ, தற்காலிக வீடுகளோ இதுவரை கிடைக்கவில்லை. ஒருவேளை உணவுக்கே திண்டாடுகிறோம் என்கின்றனர் அந்த மக்கள். இந்த குடிசைகளைச் சேர்ந்த பெண் ஒருவர் தெரிவிக்கையில்; ""போரால் அதிகளவு பாதிக்கப்பட்டவர்களே இங்கு இருக்கின்றனர். பெண் தலைமை குடும்பங்கள், ஊனமுற்ற குடும்பங்கள், முன்னாள் போராளிளாக இருந்த குடும்பங்கள் என்று வாழ்வாதார நிலையில் பெரும் நெருக்கடிகளே அதிகம். குளிப்பதற்கோ, குடிப்பதற்கோ தண்ணீர் இல்லை. இதற்காக நாங்கள் தினமும் 300 மீற்றர் வரை அலைய வேண்டும். மருத்துவ, கல்வி சேவைகளுக்கு அதைவிட நெருக்கடி நிலையே எதிர்கொண்டுள்ளோம். முன்பள்ளி பருவத்தில் 15 வரையான குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இன்று வரை மர நிழலிலேயே கற்று வருகின்றனர். மலசலம் கழிப்பதற்கு கூட இரவு வரும்வரை காத்திருக்கிறோம் என்கிறார் அந்தப்பெண். இதே கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்; ""நான் ஒரு அங்கத்தவர். எனக்கு அரச, அரச சார்பற்ற எந்த உதவிகளும் இல்லை. காரணம் ஒரு அங்கத்தவர் என்பதே எனக்கு எந்த அரச உதவிகளையும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் உயர்பாதுகாப்பு வலயத்தில் எனக்கு 5 ஏக்கர் காணியுள்ளது. அதை என்னிடம் ஒப்படைத்தாலே போதும்'' என்றார். சொந்த இடத்தில் நாங்கள் அகதிகளாக இருக்கிறோம். எங்களை ஏன் என்றும் கேளாது அரசு தனது பாட்டுக்கு காணிகளை அபகரிக்கிறது. ஏன் இந்த அநியாயம் என்று கேள்வி எழுப்புகிறார் அந்தப்பகுதியில் முடியாதிருக்கும் வயதான பெண் ஒருவர். தனக்கு துணைக்கு யாரும் இல்லை என்று குறிப்பிடும் அந்த மூதாட்டி படுத்துறங்குவதற்கு ஒரு குடிசையை அமைப்பதற்கு கூட எனக்கு உதவ யாரும் வரவில்லை என்று கவலை கொள்கிறார். எது எப்படியோ காணி எடுத்தல் அலுவலகம் சார்பாக முல்லைத்தீவு கேப்பாபுலவில் 526 ஏக்கர் காணி பறிக்கப்படுகிறது. இவற்றில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளும் உள்ளடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.