பக்கங்கள்

24 ஏப்ரல் 2013

இனியும் பயந்து பிரயோசனமில்லை-சிறீதரன்

இனியும் பயந்து ஒதுங்கி ஒதுங்கிப் போவதில் பிரயோசனமில்லை. நாங்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்த வேண்டும். எங்கள் நிலத்தை விடுவிப்பதன் மூலமே தமிழர்கள் என்ற எமது இருப்பை உறுதிப்படுத்த முடியும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார். வலி.வடக்கு பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் மக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: இலங்கை அரசு பௌத்தசிங்கள மேலாதிக்க சிந்தனையோடு தமிழ் மக்களைச் சொந்த நிலங்களிலிருந்து எப்படி வெளியேற்றலாமோ அதனைச் செய்து வருகின்றது. இலங்கையில் தமிழர்கள் என்ற இனமே இருக்கக்கூடாது என்பதற்காக அதனை அழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொழி ரீதியாக, கலை பண்பாட்டு ரீதியாக இனத்தை அழிக்கும் நடவடிக்கையின் ஒரு வடிவமாகத்தான் காணிகளைப் பறிக்கின்றது. எமது இருப்பைத் தீரிமானிப்பதில் நிலம் முக்கியமானது. நிலமில்லாமல் நாங்கள் போராடவும் முடியாது. பேசவும் முடியாது. நிலங்களைப் பறிப்பதும் அகதிகளாக்குவதும் இன சுத்திகரிப்பின் ஓர் அங்கமே. இந்த நிலப்பரப்பு வெறுமனே அரசியலுக்காகக் கதைக்கும் விடயமல்ல. மக்களின் உணர்வுகளோடு சம்பந்தப்பட்ட ஒரு விடயம். இலங்கை அரசு போர் நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தது, தமிழ் மக்களின் நிலங்களைப் பறித்து அந்த நிலங்களில் தமிழர்களை அந்நியப்படுத்தி, அந்தப் பகுதிகளில் ராணுவக் குடியேற்றங்களை நிறுவி தமிழர்களின் இன விகிதாசாரத்தை மாற்றியமைத்து முழுமையான இனச் சுத்திகரிப்பு மேற்கொள்வதற்காகவே. என்னுடைய வீட்டுக்குப் பிரச்சினையில்லை என்று மற்றவர்கள் நினைக்கக்கூடாது. இது தனியே வலி.வடக்கு மக்களின் பிரச்சினையன்று. நாளைக்கே மல்லாகத்தில், சுன்னாகத்தில் இராணுவத்தினர் காணிகளைப் பறிக்கலாம். எனவே யாழ்ப்பாணத்திலுள்ள புத்திஜீவிகள், சிவில் சமூகத்தினர், சமய நிறுவனங்கள், வர்த்தகர்கள் என எல்லோரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இலங்கை நாடாளுமன்றத்திலும் நீதியில்லை. சிங்கள இனவாத அரசு தமிழர்களுக்கு ஒருபோதும் நீதி வழங்கப் போவதில்லை. எனவே இலங்கை என்ற நாட்டில் எங்களையும் தமது நாட்டின் பிரஜைகளாகக் கருதி எங்களது இடங்களுக்கு இலங்கை அரசு விட வேண்டும். இல்லையேல் நாங்கள் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.