பக்கங்கள்

16 ஜனவரி 2012

ஈரான் மீதான தடை ஸ்ரீலங்காவிற்கும் அமெரிக்கா எச்சரிக்கை!

ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடர்பாக சிறிலங்கா அரசுக்கும் அமெரிக்கா எச்சரிக்கை குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ள நிலையில், ஈரானுடன் நெருங்கிய நட்பு நாடாக விளங்கும் சிறிலங்காவுக்கும் அமெரிக்கா எச்சரிக்கை செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது.
ஈரான் மீதான தடைகளை மீறி சிறிலங்கா செயற்படக் கூடாது என்று எச்சரிக்கை செய்யும் வகையிலேயே இந்தக் குறிப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நாளொன்றுக்கு 40 ஆயிரம் பீப்பாய் மசகு எண்ணெயை ஈரானில் இருந்து இறக்குமதி செய்து சிறிலங்கா சுத்திகரித்து வருகிறது.
அத்துடன் ஈரானுடன் நெருக்கமான இராஜதந்திர மற்றும் வர்த்தகத் தொடர்புகளையும் சிறிலங்கா அரசாங்கம் பேணிவருகிறது.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இந்த உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, அமெரிக்காவிடம் இருந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது அண்மையில் விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடர்பாக சிறிலங்கா அரசுக்கு அமெரிக்கா அறிவித்துள்ளது என்பதை சிறிலங்காவின் பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.
மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கு ஆறு மாதங்கள் தேவைப்படும் என்று அமெரிக்காவுக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் ஏனைய நாடுகளைப் போன்றே சிறிலங்காவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர, சிறிலங்காவுக்கு தனியான குறிப்பு ஏதும் வழங்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஈரான் மீதன அமெரிக்காவின் தடைகளை அடுத்து. நெருக்கடியில் சிக்கியுள்ள சிறிலங்கா அரசாங்கம் மசகு எண்ணெயை கட்டார் ,ஓமான் போன்ற நாடுகளிடம் இருந்த பெறுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.
இது குறித்துப் பேச, ஓமானின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் இந்தமாத இறுதியில் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.