பக்கங்கள்

20 ஜனவரி 2012

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானா?மனோ கேள்வி.

ஜனாதிபதி பதின்மூன்றாம் திருத்தம் என்பதற்கு அப்பால் போவார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா சொல்லிவிட்டு போய் விட்டார். ஆனால் அவர் நாட்டில் இருந்த அன்றே அரசு கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையை நடத்தாமல் புறக்கணித்தது.இதைவிட பதின்மூன்றாம் திருத்தம் என்பதற்கு அப்பால் என்றால் செனட் சபை என்பதுதான் அர்த்தம் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வல புதிய கதை சொல்கிறார்.
இந்நிலையில் இந்தியாவிலிருந்து கண்ணன் வந்து கதை சொன்னான் என தமிழ் மகா ஜனங்கள் பேச தொடங்கிவிட்டார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
பதின்மூன்றாம் திருத்தம் என்பதற்கு அப்பால் செல்ல அரசாங்கம் தயார் என இந்திய வெளிவிவகார அமைச்சரின் சொல்லிய செய்தி தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
மார்ச் மாதம் மனித உரிமை ஆணைய கூட்டத்திற்கு முன்னர் பாராளுமன்ற தேர்வு குழுவிற்குள் கூட்டமைப்பை கொண்டு நிறுத்துவதற்கு முஸ்தீபு நடைபெறுகிறது. பதின்மூன்றாம் திருத்ததிற்கு அப்பால் மற்றும் செனட் சபை ஆகிய கதைகள் எல்லாம் இதை நோக்கியே நகர்கின்றன. இது தமிழ் மக்களுக்கு நன்கு புரிகிறது. மக்களுடன் வாழும் எங்களுக்கும் மக்களின் நாடித்துடிப்பு புரிகிறது.
பதின்மூன்றாம் திருத்தததையே அமுல் செய்ய முடியாதவர்கள் அதற்கு அப்பால் எப்படி போக முடியும் என யாராவது இந்திய வெளிவிவகார அமைச்சரை கேட்டார்களா என தெரியவில்லை. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவான் என்பதாக இந்தியாவின் கருத்து அமைந்துள்ளது.
பதின்மூன்றாம் திருத்தம் இனப்பிரச்சினைக்கு தீர்வு அல்ல. ஆனால் அதையோ அல்லது அப்பாலோ அரசாங்கம் செல்லும் என்றால் அதை யாரும் வேண்டாம் என்று சொல்லப்போவதில்லை. ஆனால் நம்ப முடியாத வாக்குறுதிகளை கேட்டுவைப்பதில் எந்த ஒரு நன்மையையும் கிடைக்க போவதில்லை.
அரசாங்கம் பதின்மூன்றாம் திருத்தம் என்பதற்கு அப்பால் செல்லும் என்ற செய்தியை கூட்டமைப்பை சார்ந்த ஒரு எம்பி வரவேற்று இந்திய ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார். இது அக்கட்சியின் அதிகார பூர்வமான நிலைப்பாடா என எமக்கு விளங்கவில்லை.
எது எப்படி இருந்தாலும் இத்தகைய நம்ப முடியாத அறிவிப்புகளை நம்பி அவசர அவசரமாக விழுந்தடித்துகொண்டு மகிழ்ச்சி தெரிவித்து கொண்டாட்டம் நடத்த நாம் தயார் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.