பக்கங்கள்

26 ஜனவரி 2012

தனங்கிளப்பு பகுதியில் காணாமல்போன யுவதி எலும்புக்கூடாக மீட்பு!

தென்மராட்சியின் மறவன்புலோ- தனங்களப்பு பகுதியில் கடந்த நவம்பர் மாதமளவில் காணாமல் போயிருந்த யுவதியொருவர் இரண்டு மாதங்களின் பின்னர் எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளார். 28 வயதுடைய சுபபிரமணியம் அற்புதமலர் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டின் நவம்பர் 13ம் திகதியளவில் இவர் வீட்டிலிருந்து வெளியே சென்ற வேளை காணாமல் போயிருந்ததாக குடும்பத்தவர்களால் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இக்காணாமல் போதல் தொடர்பில் அவர்கள் பொலிஸ் நிலையத்திலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகளையும் செய்துள்ளனர்.
இந்நிலையில் அண்மையில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட அறுகுவெளி - கேரதீவு பகுதியில் வேட்டைக்கு சென்ற சிலர் கைவிடப்பட்ட இராணுவ மண் அணை ஒன்றினை அண்மித்த பகுதியில் மனித மண்டையோடு மற்றும் எலும்பு கூட்டுத்தொகுதிகளை இன்று காலை கண்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சாவகச்சேரி நீதிவான் மற்றும் சட்டவைத்திய அதிகாரி ஆகியோர் ஆய்வுகளை மேற்கொண்டனர். அவ்வேளையிலேயே காணாமல் போயிருந்த யுவதி கடைசியாக அணிந்திருந்த ஆடைகளை வைத்து குடும்பத்தவர்கள் சடலத்தை அடையாளங்காட்டியுள்ளனர்.
மீடக்கப்பட்ட சடலம் நீதிபதியின் உத்தரவு பிரகாரம் யாழ்.போதனாவைத்தயசாலையின் பிரேத அறையில் இன்று மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளது.குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதி மிக அண்மைக்காலப்பகுதியிலேயே அமைச்சர்களான பஸில் ராஜபக்ஸ மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரால் பொதுமக்களது பாவனைக்கென சுமார் 16 வருடங்களின் பின்னர் திறந்து விடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். எனினும் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்த பகுதியாகவே அப்பகுதிகள் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.