பக்கங்கள்

18 ஜனவரி 2012

ஆக்கிரமிப்பு படைகள் வெளியேற வேண்டும்!

கீரிமலை சேந்தாங்குளம் பகுதியில் டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீதும், பிரதேச சபைத் தலைவர் மீதும் சிறீலங்கா கடற்படையினர் நடாத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கடந்த இரு தசாப்தங்களாக அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த தமிழர் தயாகத்தின் தொன்மைக்குரிய பகுதிகளில் ஒன்றான சேந்தான்குளம் பகுதியில், அந்த மண்ணுக்குச் சொந்தமானவர்கள் அண்மையில் மீள குடியமர அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அவ்வாறு மீளகுடியமர்ந்த மக்கள் டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, கடற்படையினரின் முன் அனுமதிபெற்று சிரமதானப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, அங்குவந்த கடற்படையினர் எந்தவித கேள்விகளும் இன்றி பொதுமக்கள் மீது மிகக்கொடூரமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
அதேவேளை, இந்த சம்பவத்தை கேள்வியுற்று சம்பவ இடத்துக்கு விரைந்த வலிவடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தான் ஒரு பிரதேச சபைத் தவிசாளர் என்பதை உறுதிப்படுத்தும் அடையாள அட்டையை காண்பித்த பிறகும் அவர்மீதான தாக்குதலை கடற்படையினர் தொடர்ந்துள்ளனர். அத்துடன், சம்பவ இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு உந்துருளிகளை சேதப்படுத்திய கடற்படையினர் தம்வசம் எடுத்துச் சென்றுள்ளனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம், மிலேச்சத்தனமான இத் தாக்குதலை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். தமிழர் தாயகம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் வரை, தமிழர்கள் நிம்மதியாகவோ, இயல்பு நிலையுடனோ வாழ முடியாது என்பதையே இந்தச் சம்பவங்கள் எடுத்து காட்டுகின்றன.
எனவே தமிழ் மக்களின் இயல்பு வாழ்கைக்கு குந்தகமான முறையில் நிலைகொண்டுள்ள ஆயதப்படையினர் வெளியேற வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தி கூறுகின்றோம்.

நன்றி
செ.கஜேந்திரன்
பொது செயலாளர்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.