பக்கங்கள்

16 ஜூலை 2011

நியூசிலாந்து பிரதமரின் தாயும் அகதியாக சென்றவர்தான்.

எல்ஸியா கப்பலில் வந்த தமிழ் அகதிகளின் வேண்டுகோளை நியூசிலாந்து பிரதமர் நிராகரித்துள்ளதமை குறித்து கிறீன் கட்சியைச் சேர்ந்த கீய்த் லொக்கி பாராளுமன்றத்தில் நடந்த விசேட விவாதத்தின் போது அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இந்த அகதிகள் நியூசிலாந்தை நோக்கி வந்த வழியில் இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார். அகதிகளை இங்கு வரவேற்கவில்லை என்பது ஒரு சாதாரண செய்தியாக இருக்கலாம். ஆனால் அது அந்த அகதிகளின் உயிர் பிரச்சினை என்பதை ஏன் உணரவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இது நியூசிலாந்து மக்களின் மனிதாபிமான உணர்வுகளுக்கு எதிரானதாகும். பெரும் துன்பங்களை அனுபவித்து துயரிலிருந்து தப்புவதற்காக தப்பி ஓடிவருபவர்களைப் பார்த்து இவ்வாறு கூறுவது இதயமற்றவர்களின் செயலாகும் என அவர் விமர்சித்துள்ளார்.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று கப்பலில் வந்துள்ளவர்கள் கியூ வரிசையிலிருந்து பாய்ந்து வந்தவர்கள் என்று ஜோன் கீ கூறியுள்ளார்.
ஜோன் கீ யின் தாய் 1939 ஆண்டு யுத்தத்தில் நாஸி ஜேர்மனியிலிருந்து அகதியாக தப்பி வந்து பிரித்தானியாவில் தஞ்சம் கோரியவர்.
யூத அகதிகளுக்கு அப்போது கியூ வரிசையில் சேர வேண்டியிருந்ததில்லை. அவர்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக எல்லை தாண்டி கடவுச்சீட்டு இன்றி பிரித்தானியாவில் தஞ்சம் அடைந்தவர்கள் என்றும் கீய்த் லொக்கி தெரிவித்தார்.
இதன் போது குறுக்கிட்ட சபாநாயகர் தலைமை அமைச்சரின் தனிப்பட்ட குடும்ப விடயங்களை பேசுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.