பக்கங்கள்

17 ஜூலை 2011

கிளிநொச்சியில் ஜே.வி.பியும் தேர்தல் பிரச்சாரம்.

அரசின் அடக்கு முறைகளுக்குள்ளும், வன்முறைகளுக்குள்ளும் நீதியான நியாயமான தேர்தல் நடக்கும் என நாங்கள் நம்பவில்லை. இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்துள்ளார். கிளிநெச்சியில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நடைபெற இருக்கின்ற தேர்தல் ஜனநாயாக வழியில் பரப்புரைகளை நடத்தவோ அல்லது கூட்டங்களை நடத்தவோ இலங்கையில் சகல இடங்களிலும் எங்களுக்கு அனுமதிகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆளும் அரசாங்கமானது கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலோ, மாகாண சபைத் தேர்தலிலோ எதிலுமே நீதியான தேர்தலை நடத்தவில்லை. அந்த வகையில் தான் இந்தத் தேர்தலும் எங்களுக்கு நம்பிக்கையீனத்தை தருகின்றது.
சகல ஒடுக்குமுறைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராக மக்கள் சக்தியை கட்டியெழுப்புகின்ற வகையிலே தான் நாங்கள் இந்தத் தேர்தலிலே போட்டியிடுகின்றோம். அத்துடன் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும். கைது செய்யப்பட்டு, மறைமுகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளின் பெயர் விபரங்களையும் வெளியிட வேண்டும். யுத்தத்தின் போது ஏற்பட்ட அழிவுகளுக்கும் இழப்புகளுக்கும் இந்த அரசு உரிய நட்டஈடுகளை வழங்க வேண்டும்.
அதாவது சட்டம், நீதி ஆகிய அனைத்தும் அவர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றப்பட்டிருக்கின்றன. அதனைப் பயன்படுத்தி அரசு தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக் கின்றன. அந்த வகையிலேயே எமது கட்சி மீது பல வன்முறை சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.கிளிநொச்சி காவற்துறை நிலையத்தில் இதுவரை எமது கட்சிக்கு எதிரான 4 வன்முறைச் சம்பவங்களுக்கு காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம். சில முறைப் பாடுகளை அவர்கள் ஏற் றுக்கொள்ள மறுத்திருக்கின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்றுக் முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சியில் அமைந்துள்ள ஜே.வி.பி. அலுவலகத்திலிருந்து ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க மற்றும் கட்சி தொண்டர்கள் கிளிநொச்சி நகரை நோக்கி நடைபயணமாக பயணித்து தமது தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.