பக்கங்கள்

30 ஜூலை 2011

தெரு விளக்கு போடுவதற்குக்கூட இந்த அரசுக்கு தகுதியில்லை.

தெருவுக்கு விளக்கு போடுவதற்கும் குழாய் நீர் வழங்கவுமே அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தல் காலத்தில் அமைச்சர்கள் வடக்கில் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்தனர் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
தெரு விளக்குகளைப் பொருத்தும் ஆணையே தமிழ் கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கியுள்ளனர் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் கூறிய கூற்றுக்கு பதிலளிக்கும் விதத்திலேயே பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்கள் மேலுள்ளவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது. வடபகுதிக்கு சென்று தேர்தல் பிரச்சாரம் செய்த 35 அமைச்சர்களும் ஜனாதிபதி அவர்களும் தெரு விளக்கு போடவும் குழாய் நீர் வழங்கவுமே பாடுபட்டனர் என தற்போது தெரியவந்துள்ளது.
ஆனால் இதற்கு கூட இவர்கள் தகுதி இல்லாதவர்கள் என தமிழ் மக்கள் நினைத்ததால்தான் அவர்களுக்கு வாக்களிக்காது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளனர். எனவே இந்த அரசாங்க அமைச்சர்களும் ஜனாதிபதியும் அவர்களும் தாங்கள் தெருவுக்கு விளக்கு போடுவதாக கூறுவதைக்கூட தமிழ் மக்கள் நம்புவதாக இல்லை.
மேலும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் கூறுவதுபோன்று உற்று நோக்கினால் தமிழ் மக்கள் தெருக்களுக்கு விளக்கு போடுவதை எதிர்பார்க்கவில்லை அவர்களுக்கான உரிமையை வெல்ல வேண்டும் என்பதையே எதிர்பார்க்கிறார்கள். தெருவிளக்கு தேவையென்றால் அரச கட்சிக்கே அவர்கள் வாக்களித்திருப்பார்கள். எனவே எந்த வகையில் உற்று நோக்கினாலும் பசில் ராஜபக்ச அவர்கள் கூறுவது சிறிதளவும் பொருத்தமில்லாத விடயமாகும்.
ஆகையால் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் ஏன் வாக்களித்தார்கள் என்பதனை இந்த அமைச்சர்கள் நன்கு அறிந்திருந்தும் வேண்டுமென்றே ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு விதமாக பிதற்றுகிறார்கள். நாவில் வருகின்ற வார்த்தைகளுக்கு என்ன அர்த்தமென்றே தெரியாமல் பேசுகிறார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.