பக்கங்கள்

01 ஜூலை 2011

யாழ்,சிறையில் வாடும் கைதிகளின் அவலம்.

யாழ் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல்கைதிகளில் மன விரக்தி காரணமாக பலரும் தப்பித்துச் செல்ல முற்படுகின்றனர். ஆனாலும் தொடர்ச்சியாகப் பிடிக்கப்படுகின்ற அவலமும் தொடர்கிறது. யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்ட தமிழ்அரசியல் கைதிகளில் ஒருவர் தப்பிச் சென்ற நிலையில் யாழ்ப்பாண நகரப் பகுதியில் வைத்துப் பிடிக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிசார் இணைந்து அவரைப் பிடித்துள்ளனர். சட்ட வைத்திய அதிகாரிகள் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட வேளை தன்மீது எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாது பல வருடமாக யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்தக் கைதி தெரிவித்தார். எனினும் நீதிமன்றம் தொடர்ந்தும் யாழ் சிறையில் தடுத்து வைக்கவே உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே ஊர்காவற்துறைக்கு வழக்கு விசாரணை ஒன்றிற்காக நீதிமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்ட மற்றுமொரு அரசியல் கைதியும் தப்பிச் சென்ற நிலையில் ஒருநாள் முழுவதும் கடலில் நீந்தி தலைமறைவாக பாழடைந்த வீட்டில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார். யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பலரும் சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குகள் எதுவும் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படாத நிலையில் தொடர்ந்தும் யாழ் சிறையில் வாடிவருகின்றனர்.
ஏற்கனவே சிங்களப் புலிகள் என இனம் காணப்பட்ட சிங்களவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தமிழ் கைதிகள் பலரும் விடுவிக்கப்படாது தேங்கி இருக்கின்றனர். இந்த நிலையிலேயே அவர்கள் மன விரக்தி காரணமாகத் தப்பித்துச் செல்ல முற்படுகின்ற சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.