பக்கங்கள்

01 மே 2011

ஐ.நாவுக்கு பதிலளிக்க ஸ்ரீலங்கா தயாராகிறது.

அவசரகால, பயங்கரவாதத் தடைச்சட்ட விதிகளிலும் தளர்வு சிறிலங்கா மீது போர்க்குற்றம் சுமத்தும் ஐ.நா அறிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் அடுத்தவாரம் பதில் அளிக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஊடாக, வெளிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கையெழுத்திட்ட சிறிலங்கா அரசின் பதில் ஐ.நா பொதுசெயலரிடம் கையளிக்கப்படவுள்ளது.
ஐ.நா அறிக்கை வெளியானதன் பின்னர், சிறிலங்காவின் அரச தரப்பில் இருந்து பல்வேறு கருத்துகள் வெளியான போதும்- இதுவே அதிகாரபூர்வ நிலைப்பாடாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவேளை, ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை வெளியான பின்னர் சிறிலங்கா அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளது. பிரதானமாக, நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிக்காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்படவுள்ளது. ஆணைக்குழுவின் பணிக்காலத்தை நவம்பர் 15ம் நாள் வரை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் சிறிலங்கா அதிபரால் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளில் நிபுணர்குழு அதிருப்தி வெளியிட்டுள்ளதால், அடுத்த ஆறுமாத காலத்தில் அனைத்துலக சமூகத்தைத் திருப்திப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை அது மேற்கொள்வதற்கும் முயற்சிகள் எடுக்கப்படவுள்ளன. அத்துடன், சிறிலங்கா அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தினதும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தினதும் பல விதிகளை தளர்த்தவும் முடிவு செய்துள்ளது. எந்தெந்த விதிகளை தளர்த்தலாம் என்பது பற்றிய அவசர ஆலோசனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஐ.நாவுக்கு அளிக்கப்படவுள்ள சிறிலங்காவின் பதில், நிபுணர் குழுவுக்கு அரசாங்கம் எதற்காக அங்கீகாரம் வழங்கவில்லை என்பதற்குரிய விளக்கத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
பக்கசார்பு நிறைந்ததாகவும், உள்நாட்டில் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் நடைபெறும் சூழலில் இது வெளியாகியுள்ளது குறித்தும் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையிலும் அரசின் பதில் அமையவுள்ளது. இந்த அறிக்கையை வெளியிட பான் கீ மூன் எடுத்த முடிவுக்கும் இந்தப் பதிலில் சிறிலங்கா அரசு எதிர்ப்பை தெரிவிக்கவுள்ளது. அதேவேளை ஐ.நாவின் மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த மாத கூட்டத்தொடரில் இந்தவிவகாரம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் அதை எதிர்கொள்வதற்கு அமைச்சர் மகிந்த சமரசிங்கவை கொண்டு முறியடிப்பதற்கும் சிறிலங்கா அரசு ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.